Advertisement

ஐபிஎல் 2021 : பிளே-ஆஃப் சுற்றுக்குள் நான்காவது அணியாக தகுதி பெறப் போவது எந்த அணி?

ஐபிஎல் 14-வது சீசனில் சென்னை, டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், நான்காவது இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. அந்த இடத்தி பிடிக்க எந்தெந்த அணிக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்பதை பார்க்கலாம்.

பிளே ஆஃப்க்குள் 4ஆவதாக நுழையப் போவது எந்த அணி?

அமீரக அனலுக்கு ஈடு கொடுக்கும் வகையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 14-வது சீசனுக்கான பிளே-ஆஃப் கட்டத்தை நெருங்கி விட்டது. அசத்தலான ஆட்டங்களின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்குள் தடம் பதிக்க, டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளும் பிளே-ஆஃப்பை உறுதி செய்தன. இந்நிலையில் நான்காவது மற்றும் கடைசி அணியாக பிளே-ஆஃப்க்குள் நுழையப் போவது யார்? என்பது ஐபிஎல் ரசிகர்கர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

image

நடப்பு சாம்பியன் மும்பை மற்றும் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளுக்கிடையே கடும் போட்டி அந்த இடத்தை பிடிக்க நிலவுகிறது. பஞ்சாப் அணிக்கு மிகக்குறைந்த வாய்ப்புகளே எஞ்சியுள்ளன.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் வலுவான நெட் ரன் ரேட்டால் பிளே ஆஃப் வாய்ப்பு சற்று பிரகாசமாக உள்ளது. 12 புள்ளிகளுடன் உள்ள கொல்கத்தாவுக்கு, ராஜஸ்தான் அணியுடனான ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அதில் வெற்றி பெற்றாலே பிளே ஆஃப் சுற்று உறுதியாகிவிடும். இப்போட்டியில் தோல்வியுற்றாலும், மும்பை அணி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வீழும் பட்சத்தில் கொல்கத்தாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிட்டும்.

ராஜஸ்தானைப் பொறுத்தவரையில் பிளே ஆஃப்க்குள் நுழைய அந்த அணிக்கு எஞ்சியுள்ள இரு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி தேவை. 10 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அடுத்த இரண்டு போட்டிகளில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளை எதிர்த்து களமிறங்க உள்ளது. வியாழக்கிழமை நடைபெறும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தோற்றால் ராஜஸ்தானின் பிளே ஆஃப் கனவு தகர்ந்து விடும்.

image

நடப்பு சாம்பியனான மும்பை அணியும் 10 புள்ளிகளுடன் பிளே ஆஃப் கனவுகளுடன் பந்தயத்தில் உள்ளது. அந்த அணிக்கு ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகளுடன் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளன. இரண்டிலும் வென்றால் மட்டுமே நெட் ரன் ரேட் சிக்கலின்றி பிளே ஆஃப்க்குள் நுழைய முடியும். ஒரு போட்டியில் தோல்வியுற்றாலும் எதிர்மறையாக உள்ள நெட் ரன் ரேட்டால் வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும்.

ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நடைபெறும் வாழ்வா சாவா போட்டி பிளே ஆஃப்க்கான சிக்கலுக்கு சிறு தீர்வைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெட் ரன் ரேட்டும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இனி வரும் ஆட்டங்களில் அமீரக அனலுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு நிச்சயம் அனல் பறக்கும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments