Advertisement

கிளைமேக்ஸில் ஐபிஎல் லீக் போட்டிகள் - ப்ளே ஆஃப் சுற்றில் இடம்பெற 4 அணிகளிடையே கடும் போட்டி

பரபரப்பான கட்டத்தை நோக்கி ஐபிஎல் லீக் போட்டிகள். 4வது அணியாக ப்ளே ஆஃப் சுற்றில் இடம் பெறும் அணி எது? யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பதை இங்கு விரிவாக பார்க்கலம்.

பெங்களூரு அணி வெற்றி

ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 57 ரன்கள் விளாசிய நிலையில், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் சிறப்பான தொடக்கம் அமைத்தனர். எனினும் அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றி மூலம் பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணி 3-வது அணியாக, ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. சென்னை, டெல்லி அணிகள் ஏற்கனவே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

image

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில்ஐதராபாத்திற்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரரான சஹா டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கேப்டன் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடினார். இருப்பினும் அவர் 26 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆக அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

எளிதான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியில் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். நிதிஷ் ராணா 25 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 19.4ஆவது ஓவரில் 119 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.

image

ப்ளே ஆஃப் சுற்று - 4 அணிகள் கடும் மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இன்னும் ஒரு அணி மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறமுடியும். கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை அணிகள் அந்தப் போட்டியில் உள்ளன. இதில் கொல்கத்தா அணிக்கே கூடுதலான வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா அணி 13 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றுள்ளதாக ரன் ரேட்டிலும் 0.294 ஆக வைத்துள்ளது. மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே போதும். ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் பெரிய அளவில் வெற்றி பெற்று ரன் ரேட்டிலும் கூடுதலாக சேர்க்க வேண்டும். இதில் ராஜஸ்தான் அணி மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுடன் மோதும் போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. பஞ்சாப் அணிக்குதான் இருப்பதிலேயே குறைவான வாய்ப்பு உள்ளது.

image

இந்த நான்கு அணிகளுக்கு அடுத்து வரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமான போட்டியாகும். இதனிடையே முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் முனைப்பில் சென்னை, டெல்லி, பெங்களூர் அணிகள் இனிவரும் போட்டிகளை எதிர்கொள்ளும். முதல் இரண்டு இடங்களை பிடித்தால் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட முடியும். இல்லையென்றால் இரண்டு போட்டிகளில் வெல்ல வேண்டியிருக்கும். அதாவது 3வது அல்லது நான்காவது இடம் பிடித்தால் முதல் இரண்டு இடங்களை பிடித்து தோல்வி அடைந்த அணியுடன் மீண்டும் மோத வேண்டியிருக்கும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments