சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நடப்பு ஐபிஎல் சீசனுடன் ஓய்வுப் பெறுவார் என்ற பேச்சு வலம் வந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர் அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் 75-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற தோனி இதனை சொல்லி உள்ளார்.
தோனி கடந்த 2020 ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ் விழாவில் டீலர் ஒருவர் “நீங்கள் ஏன் சர்வதேச கிரிக்கெட்டில் ஃபேர்வெல் மேட்ச் விளையாடவில்லை” என தோனியிடம் கேள்வி எழுப்பினார்.
“நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்ற அறிவிப்பை சொல்ல சுதந்திர தினத்தை விட சிறந்தவொரு நாள் இருக்காது என எண்ணி அதை செய்தேன். அதே நேரத்தில் எனக்கான ஃபேர்வெல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சென்னையில் நான் விளையாடும் ஆட்டம் அமைய வாய்ப்புள்ளது. அதைவிட சிறந்ததொரு ஃபேர்வெல் எனக்கு இருக்க முடியுமா என்ன?” என தோனி பதில் அளித்துள்ளார்.
நடப்பு சீசனின் பிற்பாதி ஆட்டங்கள் அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. தோனி இந்த சீசனில் அணிக்காக பேட்ஸ்மேனாக பெரிய அளவில் ரன் ஏதும் சேர்க்கவில்லை. இருந்தாலும் இந்தியாவில் நடைபெறும் அடுத்து சீசனுடன் அவர் கிரிக்கெட் களத்தில் இருந்து பிரியா விடை பெறுவார் என நம்பப்படுகிறது. அவரது வார்த்தைகளும் தற்போது அதை உறுதி செய்துள்ளதால் தோனி அடுத்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடுவது உறுதியாகி உள்ளது. அது சென்னை அணி ரசிகர்களுக்கு நல்ல செய்தியாகவும் அமைந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments