ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் குவித்தது. நடப்பு ஐபிஎல் சீசனில் இதுதான் அதிகபட்ச ரன் ஆகும். அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 101 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும். கடைசி நேரத்தில் ஜடேஜாவும் அதிரடி காட்டி 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தார்.
பின்னர், 190 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால், லெவிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் 8 ரன் மட்டுமே எடுத்த இந்த ஜோடி அடுத்தடுத்த ஓவர்கள் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இரண்டாவது ஓவரில் 16, மூன்றாவது ஓவரில் 17, நான்காவது ஓவரில் 12 என சிஎஸ்கே பந்துவீச்சை அடித்து துவைத்தது இந்த ஜோடி. இதற்கெல்லாம் ஒரு படி மேலாக 5வது ஓவரில் ஜெய்ஸ்வால் மட்டும் மூன்று சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி 19 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். ராஜஸ்தான் அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்களை குவித்தது.
இந்த ஜோடியை ஆறாவது ஓவரில் பிரித்தார் ஷர்துல் தாக்கூர். இரண்டாவது பந்தில் லெவிஸ் விக்கெட்டை அவர் எடுத்தார். இதனையடுத்து 7வது ஓவரை வீச வந்தார் கே.எம்.ஆசிஃப். இவர் வீசிய முதல் பந்திலேயே தோனியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் ஜெய்ஸ்வால். அடுத்தடுத்து இரண்டு விக்கெட் வீழ்ந்ததால் சிஎஸ்கே அணி சற்றே நிம்மது அடைந்தது. 11 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 9 ஓவர்களில் அந்த அணி 63 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments