பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கே.எல்.ராகுலை ரூ. 20 கோடிக்கு ஏலம் எடுக்க லக்னோ அணி பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்த வருடம் முதல் அகமதாபாத், லக்னோ நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னோ அணியை, ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. அகமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேப்பிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது.
எனவே 2022 ஐபிஎல் டி20 சீசனில் 10 அணிகள் களம் காண்கின்றன. ஒவ்வொரு அணியும் 3 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரரை மட்டும் தக்கவைத்து மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் (நவ.30) அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும் என்பதால், ஐபிஎல் அணிகள் பட்டியலைத் தீவிரமாகத் தயாரித்து வருகின்றன.
இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கே.எல்.ராகுல், இந்தாண்டு அந்த அணியில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை தக்கவைக்க வேண்டுமென்றால் ரூ.16 கோடிக்கு தான் பஞ்சாப் அணி ஏலம் எடுக்க முடியும். ஆனால் கே.எல்.ராகுலை ரூ. 20 கோடிக்கு ஏலம் எடுக்க லக்னோ அணி அவரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. 2018 ஐபிஎல் ஏலத்தில் கே.எல்.ராகுலை ரூ.11 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் அருமையான ஃபார்மில் இருக்கும் ராகுல், கடந்த 4 சீசன்களில் முறையே 659, 593, 670, 626 ரன்கள் எடுத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments