சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேராக விளையாட உள்ளன.
கடைசியாக கடந்த 1998-இல் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடி இருந்தது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா உறுதி செய்துள்ளார்.
“மிகச்சிறப்பாக கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் ஒன்று ஆஸ்திரேலியா. அந்த அணி நீண்ட கால இடைவெளிக்கு பிறகு பாகிஸ்தானில் விளையாட உள்ளது ரசிகர்களுக்கு கிடைக்கவுள்ள ஸ்பெஷல் விருந்தாகும்.
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எங்களது நாட்டின் சிறந்த ஆடுகளங்களில் விளையாடும் வாய்ப்பு கிடைப்பதோடு அவர்களுக்கு எங்கள் நாட்டின் அன்பு, விருந்தோம்பல், கிரிக்கெட் விளையாட்டின் மீது நாங்கள் வைத்துள்ள மரியாதை என அனைத்தையும் இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் அறிந்து கொள்வார்கள். அவர்களுக்கு முந்தைய தலைமுறை ஆட்டக்காரர்கள் அதை மிஸ் செய்த நிலையில் நிச்சயம் இது அவர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு மார்ச் முதல் ஏப்ரல் வரையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.
முன்னதாக நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை கைவிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments