இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 296 ரன்களில் ஆட்டமிழந்தது. அக்ஸர் படேல் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
கான்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் என்ற நிலையில் நியூசிலாந்து அணி 3ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருதிமான் சஹா காயமடைந்ததால், பரத் மாற்று வீரராக களமிறங்கினார். நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் வில் யங் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 18 ரன்களிலும், ராஸ் டெய்லர் 11 ரன்களிலும், ஹென்ரி நிக்கோல்ஸ் 2 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
சதத்தை நெருங்கிய டாம் லாதம் 95 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் நியூசிலாந்து அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அக்ஸார் படேல் 5 விக்கெட்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 49 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் சுப்மான் கில் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments