Advertisement

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலியா அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம்

65 வருடங்களுக்குப் பின் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்றுள்ளார்.
 
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் வரும் டிசம்பர் 8-ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. ஆஷஸ் தொடரின் முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அப்பட்டியலில் விக்கெட் கீப்பரான டிம் பெய்ன் கேப்டனாக தொடர்வர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாலியல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய காரணத்துக்காக கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக டிம் பெயின் அறிவித்தார்.
 
இதனைத்தொடர்ந்து, ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 47-வது கேப்டனாக அவர் பொறுப்பேற்றுள்ளார். 65 வருடங்களுக்குப் பின் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்றுள்ளார். ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் துணைக் கேப்டனாக தொடர்கிறார்.
 
image
2018-ல் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 46-வது கேப்டனாக டிம் பெயின் நியமிக்கப்பட்டார். 2019 ஆஷஸ் தொடரில் கோப்பையைத் தக்கவைக்க உதவினார். 2017 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய காரணத்திற்காக அப்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் பதவி பறிக்கப்பட்டு டிம் பெயினிடம் வழங்கப்பட்டது. அப்போது இருந்து ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக டிம் பெயின் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments