Advertisement

அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா இந்தியா? இன்று ஸ்காட்லாந்து அணியுடன் மோதல்

டி20 உலகக் கோப்பை 'சூப்பர் 12' சுற்று ஆட்டத்தில் அனுபவமற்ற ஸ்காட்லாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது இந்தியா.
 
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் படுதோல்வியடைந்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆப்கானிஸ்தானை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இச்சூழலில் கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும், 'அபார' வெற்றியை தொடர வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான கடந்த போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ரோகித் ஷர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளது நம்பிக்கை அளிக்கிறது. இன்றைய ஆட்டத்திலும் இவர்கள் மீண்டும் ரன் மழை பொழிவார்கள் என எதிர்பார்க்கலாம். 'மிடில்-ஆர்டரில்' அசத்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி ஆட்டம் தொடர்ந்தால் மீண்டும் இமாலய ஸ்கோரை குவிக்கலாம்.
 
image
ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்குப்பின் மீ்ண்டும் வொய்ட் பால் ஃபார்மெட்டுக்கு திரும்பிய அஸ்வின், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தன்னுடைய ஃபார்மை நிரூபித்தார். 4 ஓவர்கள் வீசிய அவர் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்றைய போட்டியிலும் 'சுழலில்' அஷ்வின் மிரட்டலாம். வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா நம்பிக்கை அளிக்கின்றனர்.
 
இந்த தொடரில் இதுவரை ஆடிய 3 ஆட்டங்களிலும் ஒரு வெற்றி கூட பெறாத ஸ்காட்லாந்து அணியின் அரையிறுதி வாய்ப்புக்கான கதவு மூடப்பட்டுவிட்டது. எனவே இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி பெற அந்த அணி முயற்சிக்கக் கூடும். அதனால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
image
இந்தியாவுக்கு வாய்ப்பு?
 
இந்திய அணி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள இரு போட்டிகளிலும் (ஸ்காட்லாந்து, நமீபியா) இமாலய வெற்றி பெற வேண்டும். மற்றொரு போட்டியில் நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைய வேண்டும். இவ்வாறு நடந்தால் இந்தியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் தலா 6 புள்ளிகள் பெறும். 'ரன் ரேட்' அடிப்படையில் இந்திய அணிக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைக்கலாம்.
 
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இன்று சார்ஜாவில் நடக்கவுள்ள மற்றொரு 'குரூப்-2' போட்டியில் நியூசிலாந்து, நமீபியா அணிகள் மோத உள்ளன.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments