சர்வதேச ஹேண்ட்பால் ஃபெடரேஷன் (IHF) சீருடை வீதிகளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
அண்மையில் மகளிர் கடற்கரை ஹேண்ட்பால் விளையாட்டு வீராங்கனைகள் ‘பிகினி’ அணிந்து விளையாட வேண்டுமென்ற விதியினால், சர்வதேச அளவில் IHF விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் சீருடை விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
கடந்த ஜூலை மாதம் பல்கேரியாவில் நடைபெற்ற ஐரோப்பிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில், நார்வே நாட்டின் மகளிர் கடற்கரை ஹேண்ட்பால் அணி வீராங்கனைகள், கூட்டமைப்பின் விதிப்படி அணிந்து விளையாட வேண்டிய பிகினி உடைக்கு மாற்றாக ‘ஷார்ட்ஸ்’ அணிந்து கொண்டு விளையாடினர். அதன் காரணமாக அவர்களுக்கு 1737 அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது.
ஐரோப்பிய ஹேண்ட்பால் கூட்டமைப்பு விதித்திருந்த இந்த அபராதத்தை வீராங்கனைகளின் சார்பாக நார்வே விளையாட்டு கூட்டமைப்பு செலுத்தும் என அவர்களது உடை உரிமைக்கு அந்நாடு பச்சைக் கொடி காட்டியிருந்தது.
அதோடு பிரபல பாப் இசை பாடகி பிங்க், அணியை எண்ணி பெருமை கொள்வதாகவும், அபராதத்தை செலுத்த தான் தயார் என்றும் சொல்லி இருந்தார். உலகம் முழுவதும் நார்வே வீராங்கனைகளுக்கு ஆதரவு எழுந்திருந்தது.
உடை விவகாரத்தில் பாலின வேறுபாடு கூடாது என்பதை கடந்த செப்டம்பர் வாக்கில் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் மாதிரியான நாடுகள் சார்பில் IHF-யிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக கையெழுத்து இயக்கமும் மக்களிடம் பெறப்பட்டு அது கோரிக்கையாக வைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் வாக்கில் வெளியான IHF உடை தொடர்பான விதிமுறை புத்தகத்தில் ‘பிகினி’ உடை குறித்த தகவல் எதுவும் இல்லை. மாறாக மகளிர் கடற்கரை ஹேண்ட்பால் விளையாட்டு வீராங்கனைகள் ‘பாடி ஃபிட்’ டேங்க் டாப் மற்றும் ‘ஷார்ட் டைட் பேண்ட்ஸ்’ அணிந்து விளையாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பெண்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பெண்களின் உடை உரிமை நிலைநாட்டபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பெண்கள் இனி அச்சமின்றி விளையாட முன் வருவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments