இந்திய அணிக்கான கேப்டன்ஷிப் மாற்றம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராகுல் டிராவிட், ''இந்த விவகாரத்தில் நான் என்ன விவாதித்து இருந்தாலும் அதை ஊடகத்தினரிடம் பகிர்ந்து கொள்ளமாட்டேன்’' எனக் கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணம் குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், ''நாங்கள் குழுவுடன் பேசிய விஷயங்களில் முக்கியமான ஒன்று, இதுபோன்ற தொடர்கள் அணி வீரர்களின் ஒருமித்த பங்களிப்பின் காரணமாக வெற்றி பெறுகின்றன. ஒவ்வொருவரும் அவரவர் பங்கை ஆற்ற வேண்டும். அணியின் ஒரு நபரின் தனிப்பட்ட திறமைக்கு மாறாக ஒட்டுமொத்த வீரர்களின் பங்களிப்பில் கவனம் செலுத்தப்படும்.
ஒரு அணியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து முன்னேற்றம் காண விரும்புகிறோம். இதில் கேப்டன் விராட் கோலியின் பங்களிப்பு முக்கியமானது. ஒரு வீரராகவும், கேப்டனாகவும் அற்புதமாக செயல்படுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கும் வீரர்களில் அவரும் ஒருவர். இந்த தொடர் அவருக்கு சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இதன் மூலம் அணிக்கும் பலன் கிடைக்கும். இந்திய ஒரு நாள் போட்டி அணிக்கான கேப்டன்ஷிப் மாற்றம் குறித்து கேட்கிறீர்கள். இது தேர்வாளர்களின் முடிவை பொறுத்தது. இந்த விவகாரத்தில் நான் என்ன விவாதித்து இருந்தாலும் அதை ஊடகத்தினரிடம் பகிர்ந்து கொள்ளமாட்டேன்’ என்றார்.
இதையும் படிக்க: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments