பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் தரவுகளின்படி, சானியா மிர்சா வெற்றிப் பெற்ற மொத்த பரிசுத் தொகை சுமார் 52 கோடி ரூபாய்.
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 35 வயதான மிர்சா, 2005ல் WTA ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆனார். தற்போது 14-வது ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வரும் சானியா மிர்சா டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். தனது மற்றும் 3 வயது மகனின் உடல்நிலையை கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
சானியா மிர்சா கூறும் போது ‘'இனி நான் விளையாடப்போவதில்லை. இதற்கு சில காரணங்கள் இருக்கிறது. காயத்திலிருந்து முன்பைப்போல் மீண்டு வர எனது உடல் ஒத்துழைக்கவில்லை. எனது உடல் அதன் வலுவை இழக்க தொடங்கியிருக்கிறது. நான் எங்கு சென்றாலும் எனது 3 வயது மகனை உடன் அழைத்து செல்வதன் மூலம் அவனுடைய ஆரோக்கியத்தை அபாயத்திற்குள்ளாக்குகிறேன். இந்த சீசன் முடியும் வரை நான் விளையாடுவேன். கடின உழைப்பால் எனது உடல் எடையை குறைத்து, இளம்தலைமுறை தாய்மார்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்திருக்கிறேன்' என்று அவர் கூறினார். சானியா மிர்சாவின் இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டையர் பிரிவில் உலகளவில் நம்பர் 1 வீராங்கனையாக திகழும் சானியா மிர்சா, கடந்த ஆண்டு செப்டம்பரில் இரட்டையர் பிரிவில் 43வது பட்டம் வென்றார். பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் தரவுகளின்படி, சானியா மிர்சா தனது டென்னிஸ் வாழ்க்கையில் வெற்றிப் பெற்ற மொத்த பரிசுத் தொகை டாலர் மதிப்பில் 7,030,997 (ரூபாய் மதிப்பில் சுமார் 52 கோடி) ஆகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ‘தி ரியல் GOAT’ - கோலியை புகழ்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனை கைனெத் இம்தியாஸ்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments