Advertisement

ஸ்ரேயாஸ் 'விஸ்வரூபம்' அசத்திய அவேஷ்...! இளைஞர்களின் சீரிஸாக நிறைவடைந்த டி20 தொடர்!

டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக ஆட்டங்களில் வென்ற அணிகளின் சாதனையை சமன் செய்தது இந்தியா.

இந்திய அணி நேற்று இலங்கையுடன் மோதிய கடைசி டி20 போட்டியில் அபார வெற்றி பெற்று, தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ச்சியாக பெற்ற 12-வது வெற்றி இதுவாகும்.  கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளை தோற்கடித்த இந்தியா அதன் பிறகு நியூசிலாந்து (3-0), வெஸ்ட் இண்டீஸ் (3-0) இலங்கை (3-0) அணிக்கு எதிரான 20 ஓவர் தொடர்களிலும் வாகை சூடியது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக ஆட்டங்களில் வென்ற ஆப்கானிஸ்தான், ருமேனியா (தொடர்ந்து தலா 12 வெற்றி) அணிகளின் சாதனையை இந்தியா சமன் செய்தது.

மேலும் சொந்த மண்ணில் அதிக 20 ஓவர் போட்டிகளில் வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். இந்த ஆட்டத்தின் 3 முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்..

image

ஷ்ரேயாஸ் அய்யர் எழுச்சி

கடந்த வருடம் இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் ஃபீல்டிங் செய்தபோது அவருடைய இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த தொடரில் இருந்தும் அவர் விலகினார். இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. பல மாதங்களாக ஷ்ரேயாஸ் அய்யர் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை, மேலும் அவர் ஒரு ஸ்டாண்ட்-பை வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணி உடனான டி20 தொடரில் இருந்து விராட் கோலிக்கு பயோ-பபிள் கட்டுப்பாடுகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யருக்கு மீண்டும் ஆடும் லெவனில் இடம்பிடித்தார்.

இந்திய அணி நேற்று இலங்கையுடன் மோதிய கடைசி டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் அய்யர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் உறுதியுடன் நின்று 73 ரன்கள் குவித்து அணி வெற்றி பெற உதவினார். அதுமட்டுமின்றி இந்த தொடரில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இவர் அரைசதம் கடந்து இருந்தார். நேற்று நடந்த போட்டியில் ஆட்ட  நாயகன் விருது வென்ற இவர் தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார். இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் தொடர்ச்சியாக 3 முறை அரைசதம் வீரர் என்ற சாதனையை விராட் கோலியுடன் பகிர்ந்து கொண்டார் ஷ்ரேயாஸ் அய்யர்.

அதுமட்டுமின்றி  3 போட்டிகள் கொண்ட இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில்  ஸ்ரேயஸ் அய்யர் 204 ரன்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் ஷ்ரேயஸ் அய்யருக்கு நிச்சயம் இடம் உண்டு என நம்பலாம்.  

image

தசுன் ஷனாகாவை தவறிவிட்ட ஐபிஎல்

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியிருக்கிறது இலங்கை அணி. கேப்டன் தசுன் ஷனாகா இந்த தொடரில் அதிரடியாக விளையாடியது மட்டுமே இலங்கை அணிக்கு கிடைத்த ஒரேயொரு ஆறுதல். 2வது மற்றும் 3-வது ஆட்டங்களில் அவர் ஆட்டமிழக்காமல் 47 (19) மற்றும் 74 (38) ரன்களை குவித்திருந்தார். ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் வாங்கப்படாத வீரர்களின் பட்டியலில் தசுன் ஷனாகா இடம்பிடித்துள்ளது ஆச்சரியமான ஒன்று.

image

கவனம் ஈர்க்கும் முகமது சிராஜ், அவேஷ் கான்

இந்தப் போட்டியில் முகமது சிராஜ், அவேஷ் கான், ரவி பிஸ்னாய், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. முற்றிலும் புதிய பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கியது. முகமது சிராஜ் மற்றும் அவேஷ் கான் ஆகியோரின் அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை வீரர்கள் தடுமாறினர். முகமது சிராஜ், அவேஷ் கான் ஆகியோர் அபாரமாக பந்துவீச, இலங்கை அணி பவர் பிளேவில் 11  ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதே போன்று அசலங்கா, லியாங்கே, சந்திமாஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்து தடுமாறியது.

அவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். டி20 உலகக்கோப்பை நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலிய மண்ணில் வேகப்பந்து வீச்சாளர்கள் நிச்சயம் தேவை. இத்தொடரில் பங்கேற்க நாங்கள் தகுதியானவர்கள் என முகமது சிராஜ், அவேஷ் கான் இருவரும் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

இதையும் படிக்கலாம்: டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா புதிய சாதனை: பாகிஸ்தான் வீரரை முந்தினார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments