தனது புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டு, சூதாட்ட விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில், தனது பேட்டிங் மூலம் அசைக்க முடியாத பல சாதனைகளை புரிந்தவர் சச்சின் டெண்டுல்கர். 25 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், இவர், எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். கிரிக்கெட்டில் இருந்தபோதும், அதிலிருந்து ஓய்வுபெற்றபோதும், ஏராளமான விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கேசினோ எனப்படும் சூதாட்ட விளம்பரங்களில். சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றிருப்பது போன்ற படங்கள் வெளியானதால், வேதனையடைந்த அவர், தனது படங்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்தப் பார்ப்பது வேதனையளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சச்சின், தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது:
"எனது முகத்தை மார்ஃபிங் செய்து, கேசினோவை நான் ஆதரிப்பது போன்ற பல விளம்பரப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருப்பது எனது கவனத்துக்கு வந்துள்ளது. சூதாட்டம், புகையிலை, மது போன்ற பொருட்களை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, தனிப்பட்ட முறையில் நான் ஒருபோதும் ஆதரித்ததில்லை. விளம்பரத்திலும் நான் நடிக்கவில்லை. மக்களின் கவனத்தை திசை திருப்பி, அவர்களை தவறாக வழிநடத்த எனது படங்கள் பயன்படுத்தப்படுவதைப் பார்ப்பது எனக்கு வேதனை அளிக்கிறது.
இந்த விவகாரத்தில் எனது சட்டக் குழுவினர் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள். இந்தத் தகவலை அனைவருடனும் பகிர்ந்து கொள்வது எனக்கு முக்கியம் என எண்ணியதால் இதை வெளியிடுகிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் சச்சின் கேட்டுக் கொண்டுள்ளார்.
Requesting everyone to remain vigilant about misleading images on social media. pic.twitter.com/VCJfdyJome
— Sachin Tendulkar (@sachin_rt) February 24, 2022
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments