தமிழ்நாடு காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்ற சென்னை காவல்துறை அணிக்கு தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு சுழற்கோப்பையை வழங்கி பாராட்டினார்.
சென்னையில் நடைபெற்ற 61வது தமிழ்நாடு காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளின் பரிசரிப்பு விழாவில், கிரீஸ் நாட்டில் தொடங்கி டோக்யோ வரை வரிசைப்படுத்தி ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்ற ஆண்டோடு தெரிவித்த டி.ஜி.பி சைலேந்திர பாபு-வின் உரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தமிழக காவல்துறை சார்பில் 61வது மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் கடந்த 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற்றது. நீச்சல், கிராஸ் கன்ட்ரி, தடைதாண்டுதல் மற்றும் சைக்ளிங் ஆகிய போட்டிகள் நடைபெற்றதில் தனித் தனியாகவும், குழுவாகவும் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகளுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கும் பரிசளிப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கியதோடு ஆடவர், மகளிர் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்ற அணிகள் மற்றும் இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்த அணிகளுக்கு சுழற்கோப்பையை வழங்கி கௌரவித்தார்.
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் சென்னை காவல்துறை அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றது. ஆடவர் பிரிவில் இரண்டாம் இடத்தை கமாண்டோ படை அணியும், மகளில் பிரிவில் இரண்டாம் இடத்தை மத்திய மண்டல காவல்துறை அணியும் பிடித்தனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், டி.ஜி.பி ஏ.கே விஸ்வநாதன், கூடுதல் டி.ஜி.பி அபய் குமார் சிங் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை காவல்துறை அணிகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது தனக்கு பெருமையளிப்பதாக தெரிவித்தார். மேலும், பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த காவல்துறை வீரர், வீராங்கனைகளிடம் கருத்துக் கேட்புகள் நடத்தி அவர்களின் தேவை மற்றும் குறைகளை கேட்டறிந்துள்ளதாகவும், விரைவில் அவற்றை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு, தமிழக காவல்துறைக்கென மிகப்பெரிய விளையாட்டுப் பாரம்பரியம் உள்ளது எனவும், அதைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து காவல் துறையைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் முன்னேற்றதிற்கு தமிழக காவல்துறை உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் 1896 ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டில் தொடங்கி 2021 ஆம் ஆண்டு டோக்யோ வரை வரிசைப்படுத்தி நடைபெற்ற ஆண்டுகளைக் குறிப்பிட்டு டி.ஜி.பி சைலேந்திர பாபு பேசிய உரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து பேசிய அவர், இந்தியா பாரம்பரியமிக்க ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு தமிழக காவல்துறையில் இருந்து வீரர்கள் உருவாகி வருவது பெருமையளிப்பதாகவும், ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்று நாட்டுக்கு பெருமைத் தேடித்தர அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments