Advertisement

கோலி உடனான சண்டை ஏன்? மவுனம் கலைத்த கம்பீர்!

2013 ஐ.பி.எல். போட்டியின்போது விராத் கோலியுடனான மோதல் குறித்து மனம் திறந்துள்ளார் கவுதம் கம்பீர்.

2013ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கவுதம் கம்பீரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலியும் போட்டி ஒன்றில் கடும் வாய்த்தகராறில் ஈடுபட்டது இந்திய ரசிகர்களால் என்றும் மறக்க முடியாததாகும். இந்திய கிரிக்கெட் அணிக்காக இணைந்து விளையாடிய 2 நட்சத்திர வீரர்கள் இப்படி களத்தில் சண்டை போட்டுக்கொண்டது பல ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இது நடந்து 9 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அந்த மோசமான தருணத்தை மறந்து விட்டதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுபற்றி கம்பீர் கூறுகையில், “அந்த தருணத்தை மறந்துவிட்டு தற்போது நன்றாக இருக்கிறேன். அவரும் அப்படி இருப்பார் என எதிர்பார்க்கிறேன். எம்எஸ் தோனி தனக்கென்று ஒரு வழியில் போட்டியிடுவார். விராட் கோலி அவரின் வழியில் போட்டியிடக் கூடியவர். ஒரு சில நேரங்களில் ஒரு அணியை வழிநடத்தும் போது அதை செய்ய விரும்பாவிட்டாலும் செய்ய வேண்டும். ஏனெனில் உங்களின் அணி வீரர்கள் உங்களைப் போலவே ஆக்ரோஷமாக நடந்து கொள்ள வேண்டும். 

image

விராட் கோலியுடன் ஒரு நட்பு ரீதியிலான உறவை மேம்படுத்த விரும்புகிறேன். அந்த மோதல் என்பது சொந்த விருப்பு வெறுப்புக்காக நடந்தது கிடையாது. குறிப்பாக விராட் கோலிக்கு எதிராக கிடையாது. மேலும் இதை நான் மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன். விராட் கோலி இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து பல சாதனைகளை படைத்து வருவதில் எனக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் ஆரம்ப காலத்தில் இருந்த அவர் இன்று நிறைய குணங்களையும் திறமைகளையும் வளர்த்துக் கொண்டு மாறியுள்ளார். குறிப்பாக கோலி தனது உடற்தகுதியில் மேம்பாடுகளை செய்தது உண்மையாகவே அபாரமானது” என்று கூறினார்.

இதையும் படிக்க: சிக்ஸர் விளாசலில் இந்திய வீராங்கனை சாதனை; எவ்ளோ மீட்டர் தூரம் தெரியுமா? - வைரல் வீடியோ

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments