Advertisement

ஐபிஎல் கோப்பையை வெல்ல ராஜஸ்தானின் புதிய வியூகம் - பயிற்சியாளரான சீனியர் வீரர்

ஐபிஎல் 15-வது சீசன் போட்டி துவங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி லசித் மலிங்காவை வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராகவும், பேடி அப்டனை "டீம் கேட்டலிஸ்ட்" ஆகவும் நியமித்துள்ளது.

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் 26-ம் தேதி மகாராஷ்டிராவில் துவங்க உள்ளது. இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தலா 14 சூப்பர் லீக் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனால், ஒவ்வொரு அணியின் நிர்வாகமும் தங்களது அணியை பலப்படுத்த பல மாற்றங்களை செய்து வருகிறது.

அந்தவகையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான லசித் மலிங்காவை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது. ஐபிஎல் போட்டி துவங்கியது முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒன்பது சீசன்களில் விளையாடிய லசித் மலிங்கா, 170 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பெருமையை பெற்றவராக உள்ளார்.

image

குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை சாம்பியன் கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றியவர் லசித் மலிங்கா. கடந்த 2018- ம் ஆண்டில், மும்பை அணியின் பந்துவீச்சு வழிகாட்டியாக இருந்த மலிங்கா, சர்வதேச போட்டிகளில் ஓய்வுபெற்ற பின்னர், இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடரில், இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

மேலும், இவரது தலைமையில், இலங்கை கிரிக்கெட் அணி 2014-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. கிரிக்கெட்டில் 17 வருட அனுபவம் கொண்ட லசித் மலிங்கா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின், மற்றொரு வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஸ்டெஃபான் ஜோன்ஸுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.

image

இதேபோல், கடந்த 2013 முதல் 2015 மற்றும் 2019-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றிய, தென்னாப்பிரிக்கவைச் சேர்ந்த பேடி அப்டன், மீண்டும் இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் "டீம் கேட்டலிஸ்ட்" ஆக பேடி அப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், அந்த அணியின் மென்ட்டராக செயல்பட உள்ளார். 2011-ம் ஆண்டில் தோனி தலைமையிலான இந்திய அணி, 50 ஓவர் உலகக் கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர் பேடி அப்டன். தோனி தலைமையிலான இந்திய அணியில், மனநல பயிற்சியாளராக பேடி அப்டன் இருந்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக, இலங்கை முன்னாள் கேப்டன் குமார் சங்ககரா உள்ளார். அந்த அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments