Advertisement

உங்களில் யார் அடுத்த தீபக் சஹார்?? தடதடக்கும் வேகத்திற்கான தேடலில் சிஎஸ்கே!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதான வீரர்களில் ஒருவரான தீபக் சஹார் காயமுற்றிருக்கிறார் எனும் செய்தி அனைவரும் அறிந்ததே. இந்த காயம் காரணமாக தீபக் சஹார் முதல் பாதி ஐ.பி.எல் தொடரில் ஆடுவதென்பது கேள்விக்குறியாகியுள்ளது. தீபக் சஹார் இல்லாதபட்சத்தில் அவருடைய இடத்தை நிரப்பும் வகையில் சென்னை அணியில் இருக்கும் மற்ற வீரர்கள் யார் யார் என்பதை குறித்த ஒரு அலசல் இங்கே...

கடந்த நான்கு சீசன்களில் சிஎஸ்கே 2 முறை சாம்பியன் ஆகியிருக்கிறது. ஒரு முறை ரன்னர் அப் ஆகியிருக்கிறது. சிஎஸ்கேவின் இந்த அசத்தலான பெர்ஃபார்மென்ஸுக்கு காரணமாக அமைந்தவர்களின் பட்டியலில் தீபக் சஹாருக்கு முக்கிய இடமுண்டு. கடந்த 4 சீசன்களில் மட்டும் சிஎஸ்கே அணிக்காக 58 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

image

தீபக் சஹார் ஒரு பவர்ப்ளே ஸ்பெசலிஸ்ட். அவருடைய 4 ஓவர்களில் 3 ஓவர்களை பவர்ப்ளேயிலே வீசிவிடுவார். நியுபாலில் நன்றாக பந்தை ஸ்விங் செய்து எதிரணி ஓப்பனர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கேக்கு நல்ல தொடக்கத்தை பெற்றுக் கொடுப்பார். கடந்த 4 சீசன்களாக இந்த வேலையை ரொம்பபே சீராக செய்து வந்தார். இதனாலயே மெகா ஏலத்தில் தீபக் சஹாருக்கு 14 கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்து சிஎஸ்கே மீண்டும் அவரை தக்கவைத்துக் கொண்டது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான டி20 தொடரின் போது ஏற்பட்ட காயத்தால் தீபக் சஹார் கொஞ்ச நாட்களுக்கு கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டிய சூழல் உருவானது. இதனால் தீபக் சஹார் முதல் பாதி ஐ.பி.எல் அல்லது குறைந்தபட்சமாக முதல் இரண்டு வாரங்களுக்காகவாது ஐ.பி.எல் போட்டிகளில் ஆடமாட்டார் எனும் செய்தி வெளியாகியிருந்தது.

அணியின் வெற்றிகரமான பயணத்தில் தவிர்க்கமுடியாத மிக முக்கிய தூணாக தீபக் சஹார் இருப்பதால்தான் அவருக்கு 14 கோடி வரை கொடுப்பதற்கும் சிஎஸ்கே முன் வந்தது. அவ்வளவு முக்கியமான வீரர் இல்லாத சூழலில் அந்த இடத்தை சிஎஸ்கே யாரை வைத்து நிரப்பப்போகிறது?. 

image

கடந்த சீசன்களில் தீபக் சஹார் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் சிஎஸ்கேவின் இந்திய வேகப்பந்துவீச்சு கூட்டணியாக சிறப்பாக செயல்பட்டிருந்தனர். இந்த முறை ஷர்துல் தாகூருமே அணியில் இல்லை. இது மிகப்பெரிய பின்னடைவே. இவர்களின் இடத்தை அப்படியே நிரப்பும் வகையில் அனுபவமிக்க எந்த வீரர்களும் சிஎஸ்கேவின் பென்ச்சில் இல்லை.

கே.எம். ஆசிஃப், துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர், சிமர்ஜீத் சிங், முகேஷ் சௌத்ரி போன்ற அனுபவமற்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களே முழுமையாக பென்ச்சை ஆக்கிரமித்திருக்கின்றனர். தீபக் சஹார் இல்லாத சூழலில் இந்த இளம் வீரர்களிலிலிருந்து யாரோ ஒருவரையோ அல்லது இருவரையோ சிஎஸ்கே கட்டாயம் பயன்படுத்தியே ஆக வேண்டும்.

image

கே.எம்.ஆசிஃப் கடந்த நான்கு சீசன்களாக சிஎஸ்கேவின் பென்ச்சிலேயேதான் இருக்கிறார். ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். ஓரளவுக்கு நன்றாகவே ஆடியிருக்கிறார். நல்ல வாய்ப்புக்காக நீண்ட நாட்களாக காத்திருப்பதால் இவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆனால், இவர் சமீபத்திய சையது முஷ்தாக் அலி டிராஃபியில் அவ்வளவு சிறப்பாக வீசியிருக்கவில்லை.

துஷார் தேஷ்பாண்டே ஏற்கனவே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஒரு சில போட்டிகளில் ஆடியிருக்கிறார். இவரின் துடிப்பான பந்துவீச்சை பார்த்து இவர் தரமான பௌலராக உருவெடுப்பார் என ரபாடாவே பாராட்டியிருக்கிறார். கடந்த சீசனில் துபாய்க்கு சிஎஸ்கேவுடன் நெட் பௌலராகவும் சென்றிருந்தார். அதன் மூலமே இந்த சீசனில் சிஎஸ்கேவும் இவரை ஏலத்தில் எடுத்தது. சையது முஷ்தாக் அலி தொடரிலும் ஓரளவுக்கு நன்றாகவே வீசியிருக்கிறார். இவரின் வேகத்தை மனதில் வைத்து இவர் டிக் அடிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.

image

அடுத்ததாக ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர். சமீபத்தில் U19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் ஸ்டார் வீரர்களில் ஒருவர். உலகக்கோப்பையில் பவர்ப்ளேயில் நியுபாலில் சிறப்பாக வீசி கவனத்தை ஈர்த்திருந்தார். விக்கெட்டுகளை வாரி குவிக்காவிடிலும் பயங்கர சிக்கனமாக வீசியிருந்தார்.

மேலும், பேட்டிங்கிலும் கடைசிக்கட்ட ஓவர்களில் இறங்கி பவுண்டரியையும் சிக்சர்களையும் பறக்கவிட்டிருக்கிறார். நியுபாலை சிறப்பாக கையாளும் திறன் மற்றும் அந்த அதிரடி பேட்டிங்கிற்காக ராஜ்வர்தனும் தீபக் சஹாரின் இடத்தை நிரப்பும் போட்டியில் முக்கிய வீரராக இருக்கிறார். இவர்கள் போக சிமர்ஜீத் சிங் மற்றும் முகேஷ் சௌத்ரி. சிமர்ஜீத் சிங் டெல்லிக்காரர்.

image

கடந்த சீசனில் அர்ஜூன் டெண்டுல்கர் காயம் காரணமாக விலகியபோது அவருக்கு பதில் சிமர்ஜீத் சிங்கையே மும்பை அணி மாற்றுவீரராக தேர்வு செய்திருந்தது. கடந்த ஆண்டில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த இந்திய அணியுடன் நெட் பௌலராகவும் சென்றிருந்தார்.

கடைசியாக, முகேஷ் சௌத்ரி இவர் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர். இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மீது எல்லா அணிகளுக்குமே அதிக ஈர்ப்பு உண்டு. ஏலங்களில் சிஎஸ்கேவே உனத்கட்டிற்கு 9 கோடி வரை தூக்கிய கையை இறக்காமல் வைத்திருந்த வரலாறெல்லாம் உண்டு. முகேஷ் சௌத்ரி இடதுகை பௌலராக நல்ல வேரியேஷனை கொண்டு வருவார். சையது முஷ்தாக் அலி தொடரிலும் கிடைத்த வாய்ப்புகளில் நன்றாகவே வீசியிருக்கிறார். ஆனால், அனுபவமின்மை ஒரு நெகட்டிவ்வான விஷயமாக இருக்கக்கூடும்.

தீபக் சஹார் ஆடுகிறபட்சத்தில் ஷர்துல் தாகூரின் இடத்தை நிரப்பும் வகையில் மேலே சொன்ன இந்த பட்டியலிலிருந்து ஒரு வீரரை மட்டுமே தேர்ந்தெடுத்தால் போதும் எனும் சூழல் இருந்தது. அவர் இல்லாதபட்சத்தில் மேலே குறிப்பிட்ட பட்டியலிலிருந்து இரண்டு வீரர்களை தேர்வு செய்யும் நிலை வரலாம். அப்படியான சூழலில் அது அனுபவமே இல்லாத ஒரு அட்டாக் போல தோன்றும்.

image

அனுபவத்தை முன்வைத்து தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் ப்ராவோவோடு ஆடம் மில்னே மற்றும் க்றிஸ் ஜோர்டன் இருவருமே ஆட வேண்டிய சூழல் வரலாம். மொயீன் இல்லாத முதல் போட்டியில் இது சாத்தியப்படலாம். மொயீன் அலி அடுத்தடுத்த போட்டிகளில் ப்ளேயிங் லெவனுக்குள் உள்ளே வரும்போது வெளிநாட்டு வீரர்களுக்கான ஸ்லாட்களில் பிரச்சனை வரும்.

வெளிநாட்டு பந்துவீச்சாளர்களையே முழுமையாக நம்பியிருப்பதையும் சிஎஸ்கே விரும்பாது. வேறு வழியே இல்லாதபட்சத்தில்தான் இரண்டு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களையும் வைத்து ஆட வாய்ப்பிருக்கிறது. சிவம் துபேவை வைத்து எதாவது சமாளிக்க முடியுமா என்றும் யோசிக்கலாம். மன்பீரீத் கோனி, ஈஸ்வர் பாண்டே, மோகித் சர்மா என அதுவரை பெரிதாக பரிட்சயமே இல்லாத வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து சிஎஸ்கே பல சீசன்களில் சாதித்திருக்கிறது.

image

ஏன், தீபக் சஹாரும், ஷர்துல் தாகூருமே கூட சிஎஸ்கேவிற்கு ஆடும்வரை வெறும் உள்ளூர் ஸ்டார்களாக மட்டுமே இருந்தனர். சிஎஸ்கேவிற்கு ஆடிய பிறகே அவர்கள் மீது பெரிய வெளிச்சம் விழுந்தது. சிஎஸ்கேவில் அதேமாதிரியான வாய்ப்பு இப்போது வேறு சில வீரர்களுக்கு கிடைக்க இருக்கிறது. இதை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளும்பட்சத்தில் மஞ்சள் பட்டறையிலிருந்து இன்னுமொரு சூப்பர் ஸ்டார் இந்த சீசனின் முடிவில் உருவாகிவிடுவார்.

-உ.ஸ்ரீராம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments