''எனது கடமையை எனக்கு மிகவும் நெருங்கிய நண்பரான ஃபாஃப் டூப்ளசிஸுடம் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்'' எனக் கூறியுள்ளார் விராட் கோலி.
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியானது வரும் 26-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி ஏற்கெனவே விலகினார். இதையடுத்து பெங்களூரு அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. இந்த நிலையில், பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ஃபாஃப் டூப்ளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்சிபி புதிய கேப்டன் அறிவிப்பு குறித்து விராட் கோலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், ''புத்துணர்ச்சியுடன் கூடிய அணியாக ஆர்சிபி களமிறங்கவுள்ளது. இதனை எதிர்நோக்கியுள்ளேன். சுவாரஸ்ய விஷயமாக டூப்ளசிஸ் இனி ஆர்சிபி அணியை வழிநடத்தப்போகிறார். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது கடமையை எனக்கு மிகவும் நெருங்கிய நண்பரான டூப்ளசிஸுடம் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கிரிக்கெட்டில் எனக்கு மிக குறைந்த அளவிலான நண்பர்கள்தான் உள்ளனர். அதில் டூப்ளசிஸும் ஒருவர். கடந்த சில வருடங்களாக ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிந்துக் கொண்டோம். அவருக்கு கீழ் விளையாடுவது சிறப்பாக இருக்கும். இனி வரும் நாட்களில் நானும் டூப்ளசிஸும் அமைக்கப்போகும் பார்ட்னர்ஷிப் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்.
இந்தாண்டு ஆர்சிபி நிர்வாகம் ஒரு சமமான படையை உருவாக்கி கொடுத்துள்ளது. இதனை வைத்து கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என காத்துக் கொண்டுள்ளேன். உங்களை விரைவில் சந்திக்கிறேன்'' என கோலி பேசியுள்ளார்.
இதையும் படிக்க: பும்ரா, ஷமி பந்துவீச்சில் திணறும் இலங்கை வீரர்கள் - முதல் நாள் ஆட்டம் முடிவு என்ன?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments