இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல், ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருவதால், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார்.
3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், டி20 தொடரை இழந்தநிலையில், முதல் டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியை சந்தித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும், முன்னதாக நடைபெற்ற தென்னாப்பிரிக்க தொடரில் 2-1 என்ற கணக்கில் தோற்றதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி பலத்த அடியை வாங்கியது.
இதனால் அடுத்து வரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. அப்போதுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறும். தற்போது இந்தியா 54.16 சதவிகித வெற்றியுடன் 5-வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி தோற்றாலும், 66.66 சதவிகித வெற்றியுடன் 3-வது இடத்தில் உள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்த இக்கட்டான சூழலில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், தமக்கு காயம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி, கே. எல். ராகுல் இலங்கை டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள கே.எல்.ராகுல், இந்திய அணி வரும் 12-ம் தேதி பங்கேற்கும் 2-வது டெஸ்ட் தொடருக்கு திரும்பாமல், ஐபிஎல் தொடருக்காக பெங்களூருவில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுவே ரசிகர்களின் அதிருப்திக்கு காரணமாக உள்ளது.
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்ட ராகுல், இப்படி சுயநலமாக சிந்தித்திருப்பது குறித்து, பிசிசிஐ நிர்வாகிகளும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப் அணியின் கேப்டனாக விளையாடி வந்த ராகுல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அணியை பிளேஆப் சுற்றுக்கு கொண்டு செல்ல முடியாமல் திணறி வந்தார்.
இதையடுத்து அந்த அணியால் விடுவிக்கப்பட்ட கே.எல். ராகுலை, லக்னோ அணி 17 கோடி ரூபாய் விலைக்கு எடுத்து அந்த அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. லக்னோ அணி, மார்ச் 28-ம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் சூப்பர் லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையில், ஐபிஎல்லுக்கு முன்னதாக வீரர்களின் உடற்தகுதி அளவை தேசிய கிரிக்கெட் அகாடெமி மதிப்பிட உள்ளதால், இந்திய அணியில் இல்லாத வீரர்கள், பெங்களூருரில் முகாமிட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments