Advertisement

ஜேசன் ராய் விலகலால் ட்ரெண்டாகும் சுரேஷ் ரெய்னா - என்ன காரணம்?

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னாவை ரசிகர்கள் தேர்வு செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐ.பி.எல். தொடர், வரும் மார்ச் 26-ம் தேதி முதல் துவங்கி மே 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த வருடம் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 10 அணிகள் பங்கேற்கும் லீக் போட்டிகள் மும்பையில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஜேசன் ராய், குடும்பத்துடன் நேரம் செலவிட உள்ளதால், ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக நேற்று அறிவித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி இவரை அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு வாங்கியது. சுப்மன் கில்லுடன் துவக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், ஜேசன் ராயின் விலகல் அறிவிப்பால் தற்போது அந்த அணி மாற்று வீரரை தீவிரமாக தேடி வருகிறது.

image

இந்நிலையில், இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் விலகியதை அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் அதிக ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் 5 இடங்களில் இருப்பவர் சுரேஷ் ரெய்னா. ஆனால், கடந்த 2 வருடங்களாக பார்மில் இல்லாததால், சிஎஸ்கே உள்பட எல்லா அணிகளும் அவரை அணியில் எடுக்கவில்லை.

மிஸ்டர் ஐபிஎல், சின்ன தல என அனைவராலும் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டாமல் சென்றது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது சுரேஷ் ரெய்னாவின் படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

image

குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரசிகர்கள் துவங்கிய ட்விட்டர் பக்கத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஜெர்சியில் ரெய்னா உள்ள புகைப்படம் பதிவிட்டு, உங்கள் கருத்துகளை பதியுங்கள் என பதிவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, சுரேஷ் ரெய்னா ஐபிஎல் 2022-ல் மீண்டும் ஆடப் போகிறார் என்றும், அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெறலாம் என்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து, குஜராத் டைட்டன்ஸ் அணி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

முன்னதாக, குஜராத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட குஜராத் லையன்ஸ் அணியின் கேப்டனாக 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகள் இருந்தவர் சுரேஷ் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments