கிரிக்கெட்டில் இனி மன்கட் ரன் அவுட் என்பது அதிகாரப்பூர்வமானதே உள்ளிட்ட பல விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது.
பட்லரை மன்கட் ரன் அவுட் செய்த அஸ்வின் - அனல்பறந்த விவாதம்
2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாஸ் பட்லரை, பஞ்சாப் கேப்டன் அஸ்வின் ‘மன்கட்’ அவுட் செய்தது அந்தத் தொடரில் பெரும் சர்ச்சையாகப் பேசப்பட்டது. அஸ்வின் பந்துவீசும்போது, பட்லர் நான்-ஸ்ட்ரைக்கர் பகுதியிலிருந்து வெளியேறியதைப் பார்த்து அவரை எச்சரிக்காமல் மன்கட் அவுட் செய்தார்.
கிரிக்கெட் விதிமுறைகள்படி, மன்கட் அவுட் சரியானது என்றாலும் தார்மீக அறத்தின்படி அது கிரிக்கெட் பிரபலங்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பட்லரை மன்கட் அவுட் செய்ததால் ராஜஸ்தான் அணி 14 ரன்களில் தோல்வி அடைந்தது. பட்லரை மன்கட் அவுட் செய்யும் முன் அஸ்வின் எச்சரித்திருக்கலாம் என்றெல்லாம் வாதிடப்பட்டது. அஸ்வின் கடுமையாக சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டார். இருப்பினும் கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டே அஸ்வின் செயல்பட்டார் என்று ஒருதரப்பு வீரர்கள் அஸ்வினுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இந்த சர்ச்சை காரணமாகவே மன்கட் அவுட் செய்ய பந்துவீச்சாளர்கள் முன்வருவதில்லை.
இந்த நிலையில் 'மன்கட்' அதிகாரப்பூர்வமான ரன் அவுட்டாக இருக்கும் என மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (MCC) அறிவித்துள்ளது. இனி யாரும் இதனை நியாயமற்ற செயல், ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் கிடையாது எனக்கூற முடியாது எனவும் எம்சிசி தெரிவித்துள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வர எம்சிசி கமிட்டி
கிரிக்கெட் போட்டிகளின் விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வருவது, புதிய விதிமுறை உருவாக்குவது போன்ற கமிட்டியாக எம்சிசி உள்ளது. ஏற்கனவே கடந்த 2017-ஆம் ஆண்டு கிரிக்கெட் விதிமுறைகளில் சில மாற்றங்களை செய்தது எம்சிசி. இந்த நிலையில் கடந்த வாரம் புதிய மாற்றங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ள இந்த கிளப் புதிதாக அறிவித்துள்ள விதிமுறைகள் 2022 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
அவற்றில் சில குறிப்பிடும்படியான புதிய விதிமுறைகள்:-
* கேட்ச் மூலம் ‘அவுட்’ ஆன வீரருக்கு பதில் விளையாட வரும் புதிய வீரர், அந்த ஓவர் முடியவில்லை என்றால் அடுத்த பந்தை விளையாட வேண்டும். இதற்கு முன் பந்தை அடித்தவர் ஆடுகளத்தில் பாதி தூரம் கடந்திருந்தால் அடுத்து வரும் புதிய வீரர் ரன்னராக களமிறங்குவார்.
* பந்தை வீச ஓடிவந்து பந்து வீசாமல் எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்ய பந்தை தூக்கி எறிவது இனி டெட் பாலாக கருதப்படும். இதுவரை இது நோ பால் என்று அழைக்கப்படுகிறது.
* பந்து வீச்சாளர் ரன்-அப் தொடங்கிய போது பேட்ஸ்மேன் நின்றிருந்த இடத்தில் இருந்து விலகிச் செல்லும் பந்து வைட் என்று புதிய வீதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது பந்து வீசுபவர் ரன்-அப் தொடங்கிய பின் பேட்ஸ்மேன் நகரும் இடத்தில் இருந்து விலகிச் சென்றால் மட்டுமே வைட் கொடுக்கப்படுகிறது.
பந்து வீசும் போது பீல்டர் செய்யும் ஆட்சேபனைக்கு உரிய காரியத்தால் டெட் பால் என்று தற்போது கூறப்படுகிறது. இனி, பீல்டங் அணியின் இந்த நியாயமற்ற செய்கைக்கு பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் பெனால்டி ரன்களாக வழங்கப்படும்.
* எச்சில் தொட்டு பந்தைத் துடைப்பது இனி நியாயமற்ற செய்கையாக கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா சூழலுக்குப் பின் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
*பந்து வீச்சாளர் பந்து வீசி முடிப்பதற்குள் கிரீஸை விட்டு வெளியேறும் ரன்னரை ரன் அவுட் செய்வது இதுவரை விதி 41இன் கீழ் நியாயமற்ற விளையாட்டு (விதி 41.16) என்று இருந்தது. இனி இது நியாயமற்ற விளையாட்டு என்ற விதியில் இருந்து நீக்கப்பட்டு ரன் அவுட் விதிகளுக்கான விதி 38ன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: “மெக்கல்லம் இப்படி ஆடுவார்; நான் இப்படி அவுட் ஆக்குவேன்” - முன்கூட்டிய கணித்த வார்னே
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments