கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக சதமடிக்காத இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோலி, இலங்கை அணிக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள 2-வது டெஸ்ட் போட்டியிலாவது சதமடிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் ஏற்கனவே டி20 தொடரை முழுமையாக இழந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியாகும். இதனால், போட்டி துவங்குவதற்கு முன்னதாக விராட் கோலிக்கு பிசிசிஐ சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. கடந்த இரண்டரை வருடங்களாக சதமடிக்காமல் தடுமாறிவந்த விராத் கோலி, 100-வது டெஸ்ட் போட்டியில் சதமடிப்பார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.
ஆனால், விராத் கோலி முதல் இன்னிங்சில் 45 ரன்களில் அவுட்டானதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். விராத் கோலி கடைசியாக, கடந்த 2019-ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் தான் சதமடித்திருந்தார். அந்ப் போட்டியில் விராத் கோலி 136 ரன்கள் அடித்திருந்தார். இந்திய அணி இன்னங்ஸ் மற்றும் 46 ரன்களில் வெற்றியடைந்தது.
எனினும் விராத் கோலி தனது 100-வது டெஸ்டில் இரண்டு சாதனைகளை செய்திருந்தார். அந்தப் போட்டியில் 45 ரன்கள் எடுத்த அவர், டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன்களை கடந்த 6-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மேலும், 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய 12-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் விராத் கோலி படைத்தார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நாளை தொடங்கும் 2-வது பகலிரவு டெஸ்ட் போட்டியில் 71 சதம் அடித்து 2 ஆண்டு காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். மேலும், பெங்களூரு போட்டியில் களமிறங்கும் விராத் கோலி, 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை தென்னாப்பிரிக்காவின் கேரி க்ரிஸ்டன், மகாயா நிடினி மற்றும் நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோருடன் பகிர்ந்து கொள்ள உள்ளார்.
தற்போது 100 போட்டிகளில் 8007 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் 32-வது இடத்தில் இருக்கும் விராத் கோலி, இன்னும் 22 ரன்கள் அல்லது 26 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவின் மார்க் வாக் மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சர் கேரி சோபர்ஸ் ஆகியோரை முந்தி புதிய மைல்கல்லை எட்ட உள்ளது குறிப்பிடத்க்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments