இலங்கை அணிக்கு எதிரான 2-வது பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில், ஜெயந்திற்கு பதிலாக அக்ஷர் பட்டேல் ஆடும் லெவனில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் தொடரில், இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியில், ரிஷப் பந்த் (96) மற்றும் ஜடேஜாவின் (175*) அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி இந்த இமாலய வெற்றியை பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (12.02.2022) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.
இதில், இந்திய அணி முக்கிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது. முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்ற குல்தீப் யாதவ் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அக்ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை கிளப்பிய நிலையில், இதுகுறித்து டெஸ்ட் துணை கேப்டன் பும்ரா அளித்த பேட்டியில், “குல்தீப் யாதவை அணியில் இருந்து நாங்கள் நீக்கவில்லை. அவர் நீண்டகாலம் பயோ பபுலில் இருக்கிறார்.
அதிலும் மிக அதிகமான மன அழுத்தத்தோடு பயோ பபுலில் இருக்கிறார். இவ்வாறு வலிகளோடு இருப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. எப்பொழுதும் மனவலிமை என்பது மிக முக்கியமான ஒன்று. அதனால் அவர் விடுவிக்கப்பட்டார்” என்று தெரிவித்தார். மேலும், முதல் டெஸ்ட் போட்டியில் பெரிதாக சோபிக்காத இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவிற்கு பதிலாக, ஆடும் லெவனில் வலதுகை சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் அல்லது வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அக்ஷர் படேல் களத்தில் விளையாடிய போதெல்லாம் தனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளதால், அனைத்து தரப்பட்ட கோணத்திலும் ஆராய்ந்த பின்னர் அவரை அணியில் சேர்த்துள்ளதாக பும்ரா கூறியுள்ளார். தற்போது இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் உள்ள வீரர்கள் விவரம் பின்வருமாறு: ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், பிரியங் பன்சல், ரோகித் சர்மா (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், ஷுப்மன் கில், விராத் கோலி, அக்ஷர் பட்டேல் ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, சௌராப் குமார், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஸ்ரீகர் பரத் (விக்கெட் கீப்பர்), பும்ரா, ஜெயந்த் யாதவ், முகமது ஷமி , முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments