கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியைப் பொறுத்தவரை இந்த முறை பேட்டிங், பந்துவீச்சு இரு துறைகளிலும் அசுர பலத்துடன் திகழ்கிறது.
ஐபிஎல் 2022 சீசனுக்கான மெகா ஏலத்தில் அதிகம் கவனம் பெற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான காவ்யா மாறன்தான். யாரை ஏலம் எடுக்க வேண்டும், யாரை வாங்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். முன்கூட்டியே தேர்வு செய்து வைத்திருந்த வீரர்களை வாங்க, அதிக தொகைகளை வாரி இறக்கவும் தயாராக இருந்தார். அதன்படி நிகோலஸ் பூரன், எய்டன் மார்க்கரம், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை அதிக தொகை கொடுத்து தட்டித்தூக்கினார். மெகா ஏலத்துக்கு முன்பாக கேப்டன் கேன் வில்லியம்சன், அப்துல் சமட், உம்ரான் மாலிக் ஆகிய 3 வீரர்களை தக்க வைத்துக் கொண்டார். எதிர்பார்த்தது போல், டேவிட் வார்னர், ரஷீத் கான் ஆகியோரை ஐதராபாத் அணி தக்கவைக்கவில்லை.
2016 ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் இருக்கும் அந்த அணியின் பலம், பலவீனம் பற்றிய ஒரு அலசல் வருமாறு:-
பலம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியைப் பொறுத்தவரை இந்த முறை பேட்டிங், பந்துவீச்சு இரு துறைகளிலும் அசுர பலத்துடன் திகழ்கிறது. பேட்டிங் வரிசையில் கேப்டன் கேன் வில்லியம்சன், எய்டன் மாக்ரம், ராகுல் திரிபாதி என பலமான டாப் ஆர்டரை கொண்டுள்ளது. ரூ.10.75 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் மூன்றாவது வரிசையில் களமிறங்கி அந்த தொடரின் மூன்று போட்டிகளிலுமே அரை சதம் அடித்து அசத்தியிருந்தார். ஐதராபாத் அணியின் பின்வரிசை பேட்டிங் மந்தமாக இருக்கும் நிலையில், நிக்கோலஸ் பூரன் வருகையால் அந்த சிக்கல் தீரும் என உறுதியாக நம்பலாம்.
கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திரிபாதி, இம்முறை ஐதராபாத் அணிக்காக அதிரடி ஆட்டத்தை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் அபிஷேக் ஷர்மா, அப்தூல் சமாத் போன்ற அதிரடி வீரர்களும் இடம்பெற்றுள்ளதால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்டிங் வரிசை பலமிக்கதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்கலாம்: ஐபிஎல் 2022 : அறிமுக தொடரில் சோபிக்குமா குஜராத் டைட்டன்ஸ்? - ஓர் முழு அலசல்
சுழல் பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் மிரட்ட காத்திருக்கிறார். வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி.நடராஜன் கூட்டணி பலம் சோ்க்கிறது. சில தினங்களுக்கு முன் வெளியான ஒரு வீடியோவில் வலைப் பயிற்சியின்போது நடராஜன் அதிவேகமாக வீசிய ஒரு பந்து துல்லியமாக ஸ்டம்பில் அடித்து அந்த ஸ்டம்ப் உடைந்து போனது நினைவிருக்கலாம்.
பலவீனம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பது கேப்டன் கேன் வில்லியம்சன் தான். ஆனால் தோள்பட்டை காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் அவர் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து எந்த போட்டிகளிலும் விளையாடாமல் உள்ளார். கேன் வில்லியம்சன் முழு உடற்தகுதியுடன் இருக்கிறாரா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதேபோல் புவனேஷ்வர் குமார், டி.நடராஜன் இருவரும் அடிக்கடி காயத்தால் வீழ்ந்து விடுவதும் அணிக்கு சற்று கவலையளிக்கும் விஷயமாகும். எனிவே இவர்கள் மூவரும் காயத்தால் பாதிக்கப்பட்டால் அணி பெரும் சிக்கலுக்கு ஆளாகலாம்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் உத்தேச ஆடும் லெவன்: ராகுல் திரிபாதி, அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), எய்டன் மார்க்கரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், ரொமாரியோ ஷெப்பர்ட், வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார், நடராஜன்.
இதையும் படிக்கலாம்: நெருங்கும் ஐபிஎல் 2022 : லக்னோ அணியின் பலம், பலவீனம் இதுதான் - ஒரு விரிவான அலசல்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments