Advertisement

ஜாம்பவான்களுக்கு வந்த சோதனை - புள்ளி பட்டியலில் கடைசி இடங்களில் சென்னை, மும்பை அணிகள்

ஐபிஎல் 15 ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளின் சோக கீதம் தொடர்ந்து ஒலிக்கிறது. ஐபிஎல் ஜாம்பவான்கள் என்று கூறப்படும் இரு அணிகளும் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி, புள்ளி பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.

கொரோனா இல்லாத காலகட்டம். மெகா ஏலத்திற்கு பிறகான போட்டி. கூடுதலாக இரண்டு அணிகள். என்று பாசிட்டிவாக தொடங்கிய ஐபிஎல் சீசன் 15, இதுவரை சென்னை, மும்பை அணிகளுக்கு பாசிட்டிவாக அமையவில்லை. 18 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ், 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளன. இது அணி வீரர்களை போலவே ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

image

இந்நிலையில் நேற்றைய முதல் போட்டியில் ஹாட்ரிக் தோல்வி அடைந்திருந்த சென்னை அணி, வெற்றி கணக்கை தொடங்காமல் இருந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்த்து விளையாடியது. ஆனாலும் வெற்றி பெறுவதற்கான போதிய ரன்களை சேர்க்க தவறியது சென்னை. மொயின் அலி மட்டும் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடியதால், சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும், அபிஷேக் ஷர்மாவும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 17ஆவது ஓவரிலேயே ஹைதராபாத் அணி வெற்றி இலக்கை எட்டியது. சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் கடைசியில் உள்ளது.

image

இதே போல் மற்றொரு போட்டியில் பெங்களூருவை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தது. மும்பையில் வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. சூர்யகுமார் யாதவ் மட்டுமே அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை அணி புள்ளி பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. ஆனால் மும்பை அணிக்கு இது புதிதல்ல. 2015ஆம் ஆண்டு முதல் 4 போட்டிகளில் தோற்ற மும்பை, அந்த ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றது.

2008, 2014, 2018 ஆகிய மூன்று சீசன்களிலும் மும்பை தொடர் தோல்வியை தழுவியது. அவை மெகா ஏலத்திற்கு பிறகு நடைபெற்ற சீசன்கள். தற்போதும் மெகா ஏலத்திற்கு பிறகு நடைபெறும் 15ஆவது சீசனில் மும்பை தொடர் தோல்வியை சந்திக்கிறது. இதன் மூலம், அணிக்கு புதிதாக வந்துள்ள வீரர்களை ஒருங்கிணைப்பதில் மும்பைக்கு சிக்கல் இருப்பதாகவே தெரிகிறது. ஆனாலும், ஏற்கனவே நடந்தது போல் மும்பை மீண்டு வரும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிக்கலாம்: 'The Iceman' - மேட்ச்சை வென்றது திவேதியாவின் சிக்சர்கள் அல்ல; அவரின் சமயோஜிதம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments