Advertisement

ரஜத் படிதார் சதம் விளாசி அசத்தல்! லக்னோவுக்கு எதிராக 207 ரன்களை குவித்தது ஆர்சிபி!

ஐபிஎல் பிளே ஆப் சுற்றில், இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியில் ஓப்பனர்களாக டுபிளசிஸ் மற்றும் விராட் கோலி களமிறங்கினர்.

அதிர்ச்சி அளிக்கும் வகையில் மோசின் கான் வீசிய முதல் ஓவரில் கேப்டன் டுபிளசிஸ் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். சமீரா வீசிய 2வது ஓவரில் முதல் பவுண்டரி விளாசி கோலி ஆர்சிபி ரசிகர்களுக்கு விருந்தளித்தார். அடுத்து வந்த ரஜத் படிதாரும் அதிரடியாக விளையாட ஸ்கோர் மெல்ல மெல்ல உயரத் துவங்கியது. க்ருனால் பாண்டியா வீசிய 6வது ஓவரில் படிதார் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்களை விளாச பவர்பிளே முடியும்போது 50 ரன்களை ஆர்பாட்டத்துடன் கடந்தது ஆர்சிபி.

படிதார் மறுபக்கம் அதிரடியை தொடர்ந்துவந்த நிலையில், நிதானமாக விளையாடி வந்த கோலி 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் அவுட்டாகி நடையை கட்டினார். இருப்பினும் அதிரடியை தொடர்ந்த படிதார் 28 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸரை விளாசிவிட்டு க்ருனால் பாண்டியாவிடம் சிக்கி அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த லோம்ரோர் படிதாருடன் இணைந்து அதிரடியாக விளையாடத் துவங்கினார்.

சமீரா வீசிய 12வது ஓவரில் லோம்ரோர் -படிதார் கூட்டணி 3 பவுண்டரிகளை விளாச 100 ரன்களை கடந்தது. ஆனால் லோம்ரோர் பிஷ்னாய் பந்துவீச்சில் அவுட்டாக ஆர்சிபி கொஞ்சம் தடுமாறத் துவங்கியது. அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் படிதாருக்கு பக்கபலமாக விளையாடத் துவங்கினார். மோசின் கான் வீசிய 15வது ஓவரில் கார்த்திக் வழங்கிய ஒரு கேட்ச் வாய்ப்பை தாவிப் பிடிக்க முயன்று தவறவிட்டார் கே.எல்.ராகுல்.

ரவி பிஷ்னாய் வீசிய 16வது ஓவரில் படிதார் வழங்கிய ஒரு கேட்ச் வாய்ப்பை தீபக் ஹூடா தவறவிட்டார். இதன் விளைவாக அதே ஓவரில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசி சதத்தை நோக்கி டாப் கியரில் பயணித்தார் படிதார். அடுத்து ஆவேஷ் கான் வீசிய பந்தில் தினேஷ் கார்த்திக் ஹாட்ரிக் பவுண்டரிகளை பறக்கவிட ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறத் துவங்கியது. மோசின் கான் வீசிய பந்தை சிக்ஸராக விளாசியபடி 49 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார் படிதார்.

சமீரா வீசிய 19வது ஓவரில் கார்த்திக் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாச, படிதார் தன்பங்குக்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி வான வேடிக்கை காட்டினார். ஆவேஷ் கான் வீசிய 20-வது ஓவரில் கார்த்திக் ஒரு பவுண்டரி விளாச, 20 ஓவர்கள் முடிவில் 207 ரன்களை குவித்தது ஆர்சிபி அணி.

ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த படிதார் 54 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி, 7 சிக்ஸர்களை விளாசி 112 ரன்களை குவித்து அசத்தினார். ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் அதிக ரன் குவித்த ஆர்சிபி வீரராக உருவெடுத்தார் படிதார். தற்போது 208 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments