Advertisement

3 விக்கெட் வீழ்த்தி ஹர்திக் அபாரம்!குஜராத்திற்கு எதிராக 130 ரன் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான்

கேப்டன் ஹர்திக் பாண்டியா 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த ராஜஸ்தானின் பேட்டிங் ஆர்டர் நிலைகுலைந்து போய்விட்டது. 

இரண்டு மாதங்களாக களைகட்டிய 15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கிளைமேக்ஸ் இன்று. ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியும் இம்முறை கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் ஓப்பனர்களாக ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர்.

ஷமி வீசிய முதல் ஓவரில் இருவரும் நிதானித்து விளையாட, யாஷ் தயாள் வீசிய 2வது ஓவரில் அட்டகாசமாக பவுண்டரி ஒன்றை விளாசினார் பட்லர். மறுமுனையில் இருந்த ஜெய்ஸ்வாலும் ஷமி வீசிய 3வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசி அசத்தினார். அடுத்து யாஷ் தயாள் வீசிய 4வது ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசிவிட்டு அடுத்த பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார் ஜெய்ஸ்வால்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் சாம்சன், பெர்குசன் வீசிய அதிவேகப்பந்து ஒன்றை பவுண்டரிக்கு விரட்டினார். அந்த ஓவரில் 157.3 கீ.மீ வேகத்தில் பட்லருக்கு வீசினார் பெர்குசன். இந்த ஐபிஎல் சீசனில் மிக அதிவேகமாக வீசப்பட்ட பந்து இதுவாகும். அடுத்து ரஷீத் வீசிய ஓவரில் சாம்சன் ஒரு பவுண்டரி விளாசிய போதிலும், பட்லர் ரன் சேர்க்க திணறினார். பவர்பிளே முடிவில் 54-1 என்ற நிலையில் மிக வலுவாக இருந்தது ராஜஸ்தான்.

பெர்குசன் வீசிய 7வது ஓவரில் பட்லர் 2 பவுண்டரிகளை விளாசி அதகளம் செய்தார். ஆனால் ரஷீத் ஓவரில் பட்லர் திணறுவதை உணர்ந்த ஹர்திக் அவரையே அடுத்த ஓவரையும் வீசச் செய்தார். விளைவு ஒரு பவுண்டரி கூட விளாச இயலாமல் ரன் ரேட் சரியத் துவங்கியது. அடுத்து கேப்டன் ஹர்திக் வீசிய ஓவரில் கேப்டன் சாம்சன் தன் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த படிக்கல் நிதானமாக ஆட, பட்லர் ஷமீ வீசிய ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசி அதிரடிக்கு திரும்ப முயன்றார். அதே வேளையில் 25 ரன்களை கடந்தபோது ஒரே சீசனில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த டேவிட் வார்னரின் சாதனையை (848 ரன்கள்) முறியடித்தார். ஆனால் மறுமுனையில் படிக்கல் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ரஷித்திடம் சிக்கி வெளியேறினார்.

அடுத்து நன்றாக ஆடிக் கொண்டிருந்த பட்லர் விக்கெட்டை வீழ்த்தி ராஜஸ்தான் அணியை கடும் நெருக்கடிக்கு தள்ளினார் ஹர்திக் பாண்டியா. இக்கட்டான சூழலில் ஜோடி சேர்ந்த அஸ்வின், ஹெட்மேயர் அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். ஆனால் 6 ரன்கள் எடுத்த நிலையில் சாய் கிஷோர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார் அஸ்வின். அடுத்து வந்த போல்ட் அதிரடியாக விளையாட முயன்று, ஒரு சிக்ஸர் விளாசிவிட்டு அதற்கு அடுத்த பந்திலேயே அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த ரியான் பராக், ஒபெட் மெக்காய் ஆகியோர் கடுமையாக முயற்சித்த போதிலும் ஸ்கோரை பெரிதாக உயர்த்த முடியாமல் போய்விட்டது. கடைசி ஓவரில் மெக்காய் ரன் அவுட்டாகி நடையைக் கட்ட, ரியான் பராக்கை க்ளீன் போல்டாக்கி மிரட்டினார் ஷமி. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே குவித்தது ராஜஸ்தான் அணி.

கேப்டன் ஹர்திக் பாண்டியா 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சாய் கிஷோரும் தன் பங்குக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ராஜஸ்தானின் பேட்டிங் ஆர்டர் நிலைகுலைந்து போய்விட்டது. தற்போது 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது குஜராத் அணி. ஆனால் முதல் ஓவரில் சுப்மன் கில் கொடுத்த அருமையான கேட்ச் வாய்ப்பை மிஸ் செய்தார் சஹால்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments