பிளே-ஆஃப் சுற்று நீடிக்க கட்டாய வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கும் சென்னை அணி, இன்று மும்பையை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங் தேர்வு செய்தார்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன. சென்னை அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 9ஆம் இடத்தில் உள்ளது. பிளே–ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள எஞ்சிய 3 ஆட்டங்களிலும் சென்னை அணி நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.
அதே நேரத்தில் மற்ற சில அணிகளின் வெற்றி மற்றும் தோல்வியை சார்ந்தே சென்னை அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு அமைந்துள்ளது. ஒருவேளை இன்று தோல்வியடைந்தால், சென்னை அணி பிளே–ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறிவிடும். எனவே இப்போட்டியில் சென்னை அணி மும்பையை வீழ்த்தி 5வது வெற்றியை பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக டெல்லி அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் உள்ள சென்னை அணி அதே உத்வேகத்தை தொடரும் முனைப்பில் களமிறங்குகிறது.
மறுபுறம், மும்பை அணி இந்த சீசனில் இதுவரை ஆடிய 11 போட்டிகளில் 2 வெற்றி, 9 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஏற்கனவே பிளே–ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்ட மும்பை அணி மீதமுள்ள போட்டிகளில் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கலாம். இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கனவே மோதிய லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க மும்பை வரிந்து கட்டும் என்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணியில் டைமல் மில்ஸுக்குப் பதிலாக வந்த அறிமுக வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இன்று களமிறங்குகிறார். அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொல்லார்ட் இந்த போட்டியில் விளையாடவில்லை என ரோகித் ஷர்மா தெரிவித்தார். இளம் வீரர்களை வைத்து முயற்சி செய்து ஆட்டத்தை வெல்ல வேண்டும் என்று அவர் கூறினார். சோகம் என்னவென்றால் இன்றுதான் பொல்லார்டுக்கு பிறந்தநாள். ஆனால் இன்றைய போட்டியில் அவர் ஆடவில்லை. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங் தேர்வு செய்தார்!
இரு அணிகளின் ஆடும் லெவன்:
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, மொயீன் அலி, ஷிவம் துபே, எம்எஸ் தோனி, டுவைன் பிராவோ, மகேஷ் தீக்ஷனா, சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ராமன்தீப் சிங், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், குமார் கார்த்திகேயா, ஹிருத்திக் ஷோக்கீன், ஜஸ்பிரித் பும்ரா, ரிலே மெரிடித்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments