Advertisement

சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!

ஐ.பி.எல் போட்டியின் 2-வது குவாலிஃபயர் போட்டியில் பெங்களூர், ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்பாண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மகாராஷ்டிராவில் நடைபெற்ற 70 லீக் ஆட்டங்களில், குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், கடந்த 24-ம் தேதி நடைபெற்ற முதல் குவாலிஃபயர் போட்டியில், முன்னாள் சாம்பியான ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வானது. இதையடுத்து, நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மற்றொரு அறிமுக அணியான லக்னோவை 14 ரன்களில் வீழ்த்தி பெங்களூரு அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு தகுதிபெற்றது.

இதனைத் தொடர்ந்து குவாலிஃபயர் 2 போட்டி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்த சீசனில் 14 லீக் போட்டிகளில் விளையாடி 9 வெற்றி மற்றும் 5 தோல்விகளை ராஜஸ்தான் அணி சந்தித்துள்ளது. இதேபோல் பெங்களூரு அணி இந்த சீசனில் 14 லீக் போட்டிகளில் 8 வெற்றி மற்றும் 6 தோல்விகளை சந்தித்துள்ளது.

image

இரு அணிகளும் இந்த சீசனில் நேருக்கு நேர் இரண்டு முறை மோதிவுள்ளன. இதில், ஒருமுறை 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியும், மற்றொரு முறை 29 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியும் வெற்றிபெற்றுள்ளது. இதனால் சம பலத்தில் உள்ள இரு அணிகளும் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்ட உள்ளனர். இதில் வெற்றி பெறும் அணி, குஜராத்துடன் இறுதி போட்டியில் மோத உள்ளதால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments