Advertisement

ஐபிஎல்: வெற்றிக்கான நெருக்கடியில் ராஜஸ்தானை இன்று சந்திக்கும் டெல்லி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 58-வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 7 வெற்றி, 4 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளது. நடப்புத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்கான ஊதா நிற தொப்பியும் ராஜஸ்தான் அணி வீரர்கள் வசம்தான் உள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் பட்டையை கிளப்பிவரும் ஜோஸ் பட்லர் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 3 அரை சதங்கள், 3 சதங்கள் உட்பட 618* ரன்களை 61.80 என்ற அபாரமான சராசரியில் குவித்து, இந்த சீசனில் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறார். அதேபோல் 11 ஆட்டங்களில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி நடப்பு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் முதலிடத்தில் உள்ளார். பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே வலுவாக திகழும் ராஜஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் வென்று, பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்ய முயற்சிக்கும்.

image

மறுபுறம், டெல்லி அணி இந்த சீசனில் இதுவரை ஆடிய 11 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று 5ஆம் இடத்தில் உள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். டேவிட் வார்னர் (375 ரன்கள்), ரிஷப் பண்ட்  (281 ரன்கள்), பிருத்வி ஷா (259 ரன்கள்) பேட்டிங்கில் கைகொடுக்கின்றனர். குல்தீப் யாதவ் (18 விக்கெட்டுகள்), கலீல் அகமது  (16 விக்கெட்டுகள்) பவுலிங்கில் பலம் சேர்க்கின்றனர். டெல்லி அணி கடந்த ஆட்டத்தில் சென்னையிடம் படுதோல்வியை தழுவியது. மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப அந்த அணி முயற்சிக்கும்.

இந்த சீசனில் ராஜஸ்தான் - டெல்லி அணிகள் மோதுவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே சந்தித்த 34-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் 15  ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது. அப்போட்டியில் 222 ரன்கள் குவித்த ராஜஸ்தான் அணி, டெல்லியை 207 ரன்னில் சுருட்டி அசத்தியது. எனவே ராஜஸ்தான் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேசமயம் அந்த தோல்விக்கு பழிதீர்க்க டெல்லியும் வரிந்து கட்டும் என்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்:

டெல்லி கேப்பிடல்ஸ்: 1.டேவிட் வார்னர், 2.கேஎஸ் பாரத் / பிருத்வி ஷா, 3.மிட்செல் மார்ஷ், 4.ரிஷப் பண்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), 5.ரோவ்மன் பவல், 6.ரிபால் பட்டேல் / லலித் யாதவ், 7.அக்சர் படேல், 8.ஷர்துல் தாக்கூர், 9.குல்தீப் யாதவ், 10.அன்ரிச் நார்ட்ஜே, 11.கலீல் அகமது

ராஜஸ்தான் ராயல்ஸ்: 1.யஷஸ்வி ஜெய்ஸ்வால், 2.ஜோஸ் பட்லர், 3.சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), 4.தேவ்தத் பாடிக்கல், 5.ரியான் பராக், 6.ஜிம்மி நீஷம் / ராஸ்ஸி வான் டெர் டுசென் / டேரில் மிட்செல், 7.ஆர் அஷ்வின், 8.டிரெண்ட் போல்ட், 9.பிரசித் கிருஷ்ணா, 10.யுஸ்வேந்திர சாஹல், 11 குல்தீப் சென்

இதையும் படிக்கலாம்: 82 ரன்களுக்கு சுருண்ட லக்னோ: முதல் அணியாக ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது குஜராத்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments