தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் முயல், ஆமை எமொஜிகளை பதிவிட்டு, 'ஜெயிப்பதற்கு வேகத்தைவிட, நிதானமே முக்கியம்' என மறைமுகமாக குறிப்பிட்டு வாயடைக்கச் செய்தார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 57-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த குஜராத் அணி, 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ஷுப்மான் கில் சிறப்பாக விளையாடி 63 ரன் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
இதையடுத்து 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணியினர், குஜராத் பவுலர்களின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில், லக்னோ அணி 13.5 ஓவரில் 82 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தீபக் ஹூடா அதிகமாக 27 ரன்கள் எடுத்தார். குஜராத் அணி சார்பில் ரஷீத் கான் 4 விக்கெட், யாஷ் தயாள், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. பிளே-ஆஃப் சுற்றுக்குள் முதல் அணியாக குஜராத் நுழைந்தது.
ஆட்ட நாயகன் விருது ஷுப்மான் கில்லுக்கு வழங்கப்பட்டது. எனினும் லக்னோ அணியின் சேஸிங் துவங்குவதற்கு முன்பாக ஷுப்மான் கில் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டார். இந்தப் போட்டியில் ஷுப்மான் கில் 49 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து பொறுப்பாக விளையாடினாலும் அவர் வேகமாக ரன் குவிக்க முடியாமல் சற்று திணறியதாவும், அணிக்காக ஆடாமல் அரை சதத்திற்காக ஆடுகிறார் என்றும் விமர்சனம் செய்யப்பட்டார். மேலும் குஜராத்துக்கு கைவசம் விக்கெட்டுகள் இருந்தும் 150 ரன்களை கூட கடக்க முடியாமல் போனது ஏன் என்றும் ரசிகர்கள் சராமாரியாக கேள்வியெழுப்பினர்.
145 ரன்கள் என்பது லக்னோ அணிக்கு எட்டக்கூடிய எளிய இலக்கு தான் என்றாலும், குஜராத் பவுலர்களின் துல்லியமான பந்துவீச்சுத் தாக்குதலுக்கு 13.5வது ஓவரிலேயே சரணடைந்தது லக்னோ. இதையடுத்து ஷுப்மான் கில், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் முயல், ஆமை எமொஜிகளை பதிவிட்டு, 'ஜெயிப்பதற்கு வேகத்தைவிட, நிதானமே முக்கியம்' என மறைமுகமாக குறிப்பிட்டு வாயடைக்கச் செய்தார்.
இதையும் படிக்கலாம்: 82 ரன்களுக்கு சுருண்ட லக்னோ: முதல் அணியாக ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது குஜராத்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments