Advertisement

ஹர்சல் படேல், சாஹல் அசத்தல்: முதல் வெற்றியை ருசித்த இந்தியா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 48  ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்த தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் 3வது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் ஆடியது.  இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

image

தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட்டும், இஷான் கிஷானும் இணைந்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 35 பந்துகளில் 57 ரன்கள் (7 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷானும் 31 பந்துகளில் அரை சதம் கடந்தார்.  ஸ்ரேயாஸ் ஐயர் 14 ரன்னில் நடையைக் கட்டினார். அதிரடியில் இறங்கி ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷான் 54 ரன்களில் (5 பவுண்டரி, 2 சிக்ஸர்) ஆட்டமிழந்தார்.

image

ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக்  ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இதனைத்தொடர்ந்து இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா 31 ரன்கள் விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள், இந்திய பவுலர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தினர். தென்னாப்பிரிக்கா அணியில் ஹென்ரிச் கிளாசென் மட்டும் நிலைத்து விளையாடி அதிகபட்சமாக 29 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் 19.1 ஓவரில் தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டும் சேர்த்தது. இதனால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

image

5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் கேப்டனாக ரிஷப் பண்ட் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும். இதன்மூலம் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்தியா தக்கவைத்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments