Advertisement

தவறுகளை திருத்திக்கொள்வாரா ரிஷப் பண்ட்? முதல் போட்டியில் சொதப்பியதற்கான காரணங்கள் என்ன?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு கேப்டன் ரிஷப் பண்ட் செய்த 3 தவறுகளே முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது.  

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்தும், அதை கட்டுப்படுத்த முடியாமல் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் தொடர்ச்சியாக 13 ஆட்டங்களில் வென்று சாதனை படைக்கலாம் என்ற இந்திய அணியின் கனவு தகர்ந்தது. அதேபோல் சர்வதேச டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்து 200க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த ஆட்டங்களில்  இந்தியா தோல்வியடைந்ததே கிடையாது. ஆனால் இந்த ஆட்டத்தில்தான் முதல் முறையாக இந்திய அணி 200க்கும் மேல் ரன்களை குவித்து தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த தோல்வியினால் முதன்முறையாக கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட்டின் கேப்டன்சி மீது விமர்சனம் எழுந்துள்ளது. இச்சூழலில் தென்னாப்பிரிக்காவுடனான முதலாவது டி20 போட்டியில் தோற்றதற்கு கேப்டன் ரிஷப் பண்ட் செய்த 3 தவறுகளே முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது.  

image

பவர்பிளே சொதப்பல்  

ஆட்டத்தின் முக்கிய நேரத்தில் பந்துவீச்சாளர்களை ரிஷப் பண்ட்  பயன்படுத்திய விதம் முற்றிலும் தவறாக இருந்தது. அதாவது பந்துவீச்சாளர்களை சுழற்சி முறை மாற்றுவதில் அவர் தவறு செய்தார். குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் 6 ஓவர்களை வீசுவதற்கு 5 பவுலர்களை பயன்படுத்தினார். பொதுவாக 2, 3 பவுலர்கள் மட்டுமே அந்நேரத்தில் பயன்படுத்த வேண்டும். பவர்பிளேவில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்தது தவறான முடிவு. அதற்கு பதில், அவர் அக்சர் பட்டேலுக்கு கொடுத்திருக்கலாம். பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக பந்துவீசக் கூடிய திறன் படைத்தவர் அக்சர் படேல்.

image

சாஹலுக்கு வெறும் 2 ஓவர்கள்

யுஸ்வேந்திர சாஹலுக்கு 2 ஓவர்கள் மட்டுமே பந்துவீச கொடுத்தார் கேப்டன் ரிஷப் பண்ட். அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சஹாலின் முதல் 2 ஓவர்களில் 23 ரன்கள் சென்றது என்பதற்காக இந்த ஆட்டத்தில் இவரின் திறன் இவ்வளவுதான் என்று முடிவெடுத்த பண்ட், அவரை பந்துவீச அழைக்கவில்லை. வெற்றி வாய்ப்பு கை நழுவியப் பிறகு கடைசி ஓவரை 3-வது ஓவராக சஹாலிடம் வழங்கினார்.

முக்கியமான விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியவர் சாஹல். அவ்வாறிருக்கையில் அவர் மீது நம்பிக்கை காட்டாமல் அவருக்கு வெறும் 2 ஓவர்கள் மட்டுமே வழங்கியது தவறான முடிவு என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். சாஹலுக்கு ரிஷப் பண்ட் 4 ஓவர்களையும் வழங்கியிருக்க வேண்டும். ஒருசில ஓவர்களில் சஹால் தடுமாறினாலும் அதற்கு அடுத்த ஓவரிலே தவறை திருத்தி கொண்டு விக்கெட்டை எடுக்கும் திறமையை அவர் பெற்றுள்ளார்.

டேவிட் மில்லரும் வாண்டர் டசனும் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடிக்கொண்டிருந்தபோது அந்த ஜோடியை பிரிக்க சாஹலை பயன்படுத்தியிருக்க வேண்டும் ஆனால் அதை செய்ய தவறிவிட்டார் ரிஷப் பண்ட்.  எனவே சாஹலை சரியாக பயன்படுத்திருந்தால் முதல் ஆட்டத்தின் முடிவுகூட தலைகீழாக மாறியிருந்திருக்க வாய்ப்புள்ளது.

image

புது வியூகம் வகுப்பாரா பண்ட்?

வேகப்பந்து வீச்சாளர்களையும் ரிஷப் பண்ட் முறையாக பயன்படுத்தவில்லை. ஹர்திக் பாண்டியா ஒரு ஓவர் மட்டுமே வீசி 18 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால் அவருக்கு மேலும் ஒரு ஓவர் வழங்க தயங்கினார் ரிஷப் பண்ட். ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு ஓவர் மட்டுமே கொடுத்தது மிகப்பெரிய தவறு என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். பந்துவீச்சாளர்களிடம் இருந்து நல்ல முடிவுகள் கிடைக்காத சூழலில்,  பவுலிங் வியூகங்களை மாற்றும்படி அவர்களிடம் ஏதாவது சொல்லி இருக்கலாம். ஆனால் அதையும் செய்யவில்லை. கேப்டனாக முதல் போட்டி என்பதால் இதனை பெரிய குறையாக எடுத்து கொள்ளக் கூடாது என்றாலும் அடுத்துவரும் போட்டிகளில் ரிஷப் பண்ட் சரி செய்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.

இதையும் படிக்கலாம்: தவறுகளை திருத்திக் கொள்வாரா ரிஷப் பன்ட்? வெற்றிப் பாதைக்கு திரும்புமா இந்தியா?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments