Advertisement

'ஹர்ஷல் படேல் உடனான மோதலுக்கு இதுதான் காரணம்' - மனம்திறந்த ரியான் பராக்

ஹர்சல் படேல் உடனான மோதல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் ரியான் பராக்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக், மைதானங்களில் நடந்து கொண்ட விதம் பலமுறை விமர்சனங்களை சந்தித்தது. இவர் பொதுவாக கோபம் அடையும் குணம் கொண்டவர். கேட்ச் பிடித்தவுடன் பந்தை கீழே கொண்டு சென்று அம்பயர்களை சரிபார்த்துக்கொள்ளும்படி கிண்டலடிப்பது, ஃபீல்டிங்கில் சீனியர் வீரர்களிடம் ஆக்ரோஷத்துடன் நடந்துக்கொள்வது, எதிரணி வீரர்களை முறைப்பது என தொடர்ந்து தன் சேட்டைகளை செய்து வருகிறார். இது குறித்து ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் அறிவுரை அளித்த பிறகும் ரியான் பராக் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. இந்த சீசனில் 17 போட்டிகளில் விளையாடியுள்ள ரியான் பராக் ஒரு அரைசதம் உள்பட 183 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். எனினும் ஃபில்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட ரியான் பராக், 17 கேட்ச்சுகளை பிடித்தார்.

image

இதனிடையே ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது ரியான் பராக் இக்கட்டான சூழலில் களமிறங்கி 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அப்போது ஆர்சிபி பந்துவீச்சாளர் ஹர்சல் பட்டேலுடன் ரியான் பராக் மோதலில் ஈடுபட, அது இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது.  இதைப் பார்த்த மற்ற வீரர்கள் ரியான் பராக்கையும், ஹர்சல் படேலையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இருவரின் கோபமும் இதோடு முடியவில்லை. ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றபின் இரு வீரர்களும் ஒருவொருக்கு ஒருவர் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் அனைத்து வீரர்களுக்கும் கைக்குலுக்கி வந்தார். அப்போது ஹர்சல் படேலிடம் ரியான் பராக் கை நீட்டியபோது, அவர் ரியான் பராக்கை கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிட்டார். இதனால் களத்தில் நடந்த சம்பவத்தை மறக்காமல் ஹர்சல் படேல் இருப்பது தெரிந்தது. ஹர்சல் பட்டேலுடன் ரியான் பராக் நடந்து கொண்ட விதம், ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அந்த மோதல் குறித்து ரியான் பராக் விளக்கம் அளித்துள்ளார்.

image

அதுபற்றி ரியான் பராக் கூறுகையில், ''கடந்த ஆண்டு நான் ஹர்சல் பட்டேல் பந்துவீச்சில் அவுட் ஆனேன். அப்போது என்னை டிரெஸிங் ரூம் நோக்கி அவர் என்னை கைகாட்டி இருக்கிறார். அப்போது நான் கவனிக்கவில்லை. ஹோட்டலுக்கு வந்து மறு ஒளிபரப்பை டிவியில் பார்க்கும் போது ஹர்சல் பட்டேல் செய்தது என் மனதை பாதித்தது. இந்த நிலையில், மீண்டும் இந்த சீசனில் ஹர்சல் பட்டேலை பார்த்த போது, அவர் செய்தது நினைவுக்கு வந்தது. இதனால், அவர் பந்துவீச்சில் அடித்துவிட்டு, அவர் கடந்த ஆண்டு செய்ததை நான் மீண்டும் செய்தேன். இது தான் மோதலுக்கு காரணம். அப்போது முகமது சிராஜ் என்னிடம் வந்து, 'நீ சின்னப் பையன், சின்னப் பையன் மாதிரி நடந்து கொள்' என்று கூறினார். ஆனால் போட்டி முடிந்ததும் ஹர்சல் பட்டேல் என்னிடம் கைக் குலுக்காமல் சென்றுவிட்டார். அது கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமானமாக எனக்குத் தெரிந்தது'' என்று கூறினார்.

இதையும் படிக்கலாம்: "ஆல் டைம் கிரேட்": நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசிய ஜோ ரூட் - கங்குலி பாராட்டு!


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments