'ரிஷப் பண்ட் கடந்த 3 ஆட்டங்களில் ஆட்டமிழந்த விதத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை' என விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். முதல் 3 ஆட்டங்களில் சேர்த்து மொத்தமாகவே 40 ரன்கள் மட்டுமே அடித்த ரிஷப் பண்ட், 4வது ஆட்டத்தில் 23 பந்தில் வெறும் 17 ரன் மட்டுமே அடித்தார். பெரும்பாலும் வைடாக செல்லும் பந்துகளை அடித்து ஆட்டமிழந்துள்ள அவரை முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரிஷப் பண்ட் செய்த தவறுகளை சுட்டிக்காட்டியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ''ரிஷப் பண்ட் கடந்த 3 ஆட்டங்களில் ஆட்டமிழந்த விதத்திலிருந்து அவர் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வைடாக பந்தை வீசுகின்றனர். ரிஷப் பண்ட் விரட்டிச்சென்று அடித்து விக்கெட்டை இழக்கிறார். வைடாக வீசப்படும் பந்துகளை அடிப்பதை அவர் தவிர்க்க வேண்டும். தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்கள் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே பந்துவீசி ரிஷப் பண்டை வீழ்த்த வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். அதை செயல்படுத்தவும் செய்கின்றனர்.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்துக்கு 10 முறை ஆட்டமிழந்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான பந்துகளை ரிஷப் தொடவில்லை என்றால் வைடாக இருந்திருக்கும். அந்த பந்தை அடிக்கும் அளவிற்கு அவரிடம் பலமும் இல்லை. ஒரே மாதிரி அவுட் ஆவது என்பது ஒரு வளரும் பேட்ஸ்மேனுக்கு நல்லதல்ல'' என்று கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: தொடரை வெல்லப்போவது இந்தியாவா? தென் ஆப்பிரிக்காவா?- பெங்களூரில் 'ட்விஸ்ட் ' வைக்குமா மழை?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments