Advertisement

வீறுநடை போட்ட ‘குட்டிப்புலி’ வங்கதேசம்.. கிரிகெட் உலகில் வீழ்ச்சியை நோக்கி ஆஸ்திரேலியா அணி

கிரிக்கெட் உலகில் ஒருகாலத்தில் கோலோச்சி வந்த நாடு ஆஸ்திரேலியா. டெஸ்ட், ஒருநாள் என அனைத்து சர்வதேச போட்டிகளிலும் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வந்தது. ஆனால், தற்போது ஆஸ்திரேலிய அணி சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக டி20 போட்டிகளில் அந்த அணி கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது என்பதே உண்மையான நிலை. தற்போது வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரிலும் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடியது. மொத்தம் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடின. இந்த தொடரை வங்கதேச அணி 4 - 1 கணக்கில் வென்றுள்ளது. இன்று நடைபெற்ற 5வது மற்றும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த வங்க தேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாகவே முகமது நைய்ம் 23 ரன்கள் எடுத்து இருந்தார். 

123 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் வெற்றியை கோட்டை விட்டது. அந்த அணியில் கேப்டன் மேத்யூவ் வேட் 22, பென் மெக்டெர்மோட் 17 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன் 9 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

image

வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். மொத்தமாக ஐந்து போட்டிகளில் 114 ரன்களையும், 7 விக்கெட்டுகளையும் இந்த தொடரில் அவர் கைப்பற்றி இருந்தார். 

இந்த தொடரின் டாப் 5 பவுலர்களில் வங்கதேச அணியின் நான்கு பவுலர்கள் இடம் பிடித்துள்ளனர். நசும் அகமது, முஸ்தாபிஸுர் ரஹ்மான், இஸ்லாம் மற்றும் ஷகிப் அல் ஹசன் இடம் பெற்றிருந்தனர். பேட்டிங்கிலும் வங்கதேச அணி பேட்ஸ்மேன்களே டாப் 5-இல் நான்கு வீரர்களாக இடம் பெற்றிருந்தனர். ஷகிப் அல் ஹசன், ஹுசைன், முகமது நைம், மஹ்மதுல்லா மாதிரியான பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளனர். 

அடுத்த சில மாதங்களில் டி20 உலக கோப்பை தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சி அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அண்மையிள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் டி20 தொடரி 1 - 4 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா இழந்தது. 

image

ஆஸ்திரேலிய அணியின் வீழ்ச்சிக்கு அந்த அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதிகம் இல்லாதது ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் ஆஸ்திரேலிய அணியில் பென் மெக்டர்மொட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), டேனியல் கிறிஸ்டியன், மிட்செல் மார்ஷ், ஹென்றிக்ஸ், அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் டர்னர், ஆஷ்டன் அகர், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா, மிட்செல் ஸ்வெப்சன், ஜோஷ் பிலிப், டை, ஹேசல்வுட் மாதிரியான வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். 

சர்வதேச தரவரிசையைப் பொறுத்தவரை ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்தில் இருந்தாலும், டி20 போட்டிகளில் 6 இடத்தில் தான் உள்ளது. ஆனால், ஆறாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள வங்கதேச அணியிடம் 1-4 என்ற கணக்கில் தொடரை பறிகொடுத்துள்ளது அந்த அணிக்கு பெரிய பின்னடைவுதான்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments