டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன் பதவி கிடைக்கும் சூழல் இல்லாததால் அந்த அணிக்காக அடுத்த சீசன் ஐபிஎல்லில் அவர் விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
14 ஆவது ஐபிஎல் டி20 போட்டிகள் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை 4 ஆவது முறையாக வென்றது. இதனையடுத்து 15 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளுக்கு பிசிசிஐ இப்போதே ஆயத்தமாகி வருகிறது. அடுத்தாண்டு ஐபிஎல்லில் மேலும் இரண்டு புதிய அணிகளாக அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் நுழைகின்றன. இதனையடுத்து மொத்தம் 10 அணிகள் அடுத்தாண்டு தொடரில் களம் காண்கின்றன. இதன் காரணமாக வரும் டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடத்தப்பட இருக்கிறது.
இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக டெல்லி அணிக்காக விளையாடி வருபவர் ஸ்ரேயாஸ் ஐயர். 2020 ஐபிஎல் தொடரின்போது முதலில் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் 2021 ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டதால் டெல்லி அணிக்கு கேப்டனாக ரிஷப் பன்ட் நியமிக்கப்பட்டார். இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர். அமீரகத்தில் தொடர்ந்த போட்டியின்போது அணியில் இடம்பெற்றார். ஆனால் அவர் ஒரு பேட்ஸ்மேனாகவே தொடர்ந்தாரே தவிர, கேப்டன் பதவி வழங்கப்படவில்லை.
2021 ஐபிஎல் இறுதிப் போட்டி வரை சென்ற ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணி சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோற்றது. இப்போது 15 ஆவது ஐபிஎல் சீசனுக்கு ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதற்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் பதவியை அவர் எதிர்பார்ப்பதாலும், ஆனால் அதற்கு இப்போது வாய்ப்பு இல்லாததால் தான் விலக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கெனவே இருக்கும் ஐபிஎல் அணிகள் ஏலத்துக்கு முன்பாக 4 வீரர்களை மட்டுமே வைத்துக்கொள்ளலாம் என்பதால், டெல்லி அணி நிர்வாகமே ஸ்ரேயாஸை நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments