பாகிஸ்தானின் தொடர் வெற்றிக்கு 'ஸ்பீடு பிரேக்' போடுவது என்பது நமிபியாவுக்கு கடும் சவாலாக இருக்கும்.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது நடைபெறும் 'சூப்பர்-12' சுற்றில் இன்று அபுதாபியில் இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்காள தேச அணிகள் அணிகள் மோதுகின்றன.
தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி ‘சூப்பர்-12’ சுற்றின் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அதன்பின் அடுத்த இரண்டு ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளை வீழ்த்தி அசத்தியது. பேட்டிங்கில் குயின்டான் டி காக், தெம்பா பவுமா, மார்க்ராம், வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சிலும் அந்த அணி வலுவாக உள்ளது.
மக்முதுல்லா தலைமையிலான வங்காள தேச அணி இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவி அரை இறுதி வாய்ப்பை இழந்து கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. காயம் காரணமாக ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் விலகி இருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச 20 ஓவர் போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 6 முறையும் தென்னாப்பிரிக்கா அணியே வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில், நடப்புத் தொடரில் அசைக்க முடியாத அணியாக வலம் வரும் பாகிஸ்தான் அணி, நமிபியாவை எதிர்கொள்கிறது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்த தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளை அபாரமாக வீழ்த்தி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எல்லா துறையிலும் சமபலத்துடன் உள்ளது.
ஜெரார்டு எராஸ்மஸ் தலைமையிலான நமிபியா அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை தோற்கடித்தது. ஆனால் முந்தைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது. பாகிஸ்தானின் தொடர் வெற்றிக்கு ஸ்பீடு பிரேக் போடுவது என்பது நமிபியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments