Advertisement

'பும்ரா அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்' - பாரத் அருண் வெளிப்படை

'ஒரு வேகப்பந்து வீச்சாளர் அணியை வழிநடத்த சரியான தேர்வாக இருக்காது' என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண்.

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்ததை தொடர்ந்து, அடுத்த இந்திய டெஸ்ட் கேப்டன் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. ஒருநாள், டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பதால், ரோஹித் சர்மாவிடம் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை வழங்குவதில் சிக்கல் இருக்கிறது.

டெஸ்ட் கேப்டன் போட்டியில் கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், ஜஸ்பிரித் பும்ரா அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். 'கேப்டன் வாய்ப்பு அளிக்கப்பட்டால் அதைக் கவுரவமாகக் கருதுவேன்' என்று தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படையாக கூறியிருந்தார்.

image

எனினும், 'ஒரு வேகப்பந்து வீச்சாளர் அணியை வழிநடத்த சரியான தேர்வாக இருக்காது' என்று கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரும், கடந்த சில ஆண்டுகளாக பும்ராவுடன் நெருக்கமாக பணியாற்றியவருமான பாரத் அருண்.

இதுகுறித்து பாரத் அருண் அளித்த பேட்டி ஒன்றில்'' பும்ரா கேப்டனாகும் தகுதியுடையவர்தான். ஆனால் பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கினால் அவரால் மூன்று ஃபார்மேட் போட்டிகளையும் எப்போதும் தக்கவைக்க முடியுமா? கேப்டன் என்பவர் புத்துணர்ச்சியுடன் இருக்க போட்டிகளுக்கு இடையில் மற்றும் தொடர்களுக்கு இடையில் அவருக்கு போதுமான இடைவெளிகள் வழங்கப்பட வேண்டும். அதைக் கணக்கில் கொண்டால், பும்ரா கேப்டனாக முடியுமா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.

கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவரில் ஒருவர் அணியை வழிநடத்தும் தகுதியைப் பெற்றிருக்கிறார்கள். இது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தது. நான் ஒரு பேட்ஸ்மேனையே கேப்டனாக பார்க்க விரும்புகிறேன், ஏனெனில் அவர் எந்த தொடரிலும் ஓய்வெடுக்காமல் மூன்று வடிவங்களிலும் விளையாட முடியும்'' என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments