''இந்தியாவையும், இந்திய மக்களையும் நான் எந்தளவிற்கு நேசிக்கிறேன் என்பது ரகசியமல்ல. அது அனைவருக்கும் தெரிந்த ஒன்று'' என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் பிரட் லீ.
இந்தியா முழுவதும் கடந்த 26ஆம் தேதி நாட்டின் 73வது குடியரசுத் தினம் கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழா தொடர்பாக மேத்யூ ஹைடன், கிறிஸ் கெய்ல், ஜான்டி ரோட்ஸ். கெவின் பீட்டர்சன், பிரட் லீ உள்ளிட்ட பல்வேறு சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். இக்கடிதங்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் அந்தந்த நாட்டு வீரர்களிடம் வழங்கப்பட்டன. கடிதம் கிடைக்கப்பெற்ற வீரர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் பிரதமரின் கடிதம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ சமூக வலைத்தளப் பக்கங்களில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், “இந்த கடிதத்தை பெறுவதற்கு நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். இந்தியாவையும், இந்திய மக்களையும் நான் எந்தளவிற்கு நேசிக்கிறேன் என்பது ரகசியமல்ல. அது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நான் பல நாட்கள் அந்த நாட்டில் மகிழ்ச்சியாக செலவிட நேர்ந்தது. சற்று தாமதம்தான், இருந்தாலும் இந்திய மக்களுக்கு என்னுடைய குடியரசு தின வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
அதேபோன்று கெவின் பீட்டர்சன் வெளியிட்ட பதிவில், “உங்களுடைய கடிதம் மற்றும் வார்த்தைகளுக்கு நன்றி. 2003ஆம் ஆண்டு நான் இந்தியாவில் முதல் முறையாக கால் பதித்தேன். அப்போது முதல் ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இந்தியாவை எனக்கு அதிகம் பிடித்துள்ளது. சமீபத்தில் என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது இந்தியாவில் எனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு நான் சற்றும் தயங்காமல் இந்திய மக்கள் எனக் கூறினேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: காவல் துறையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் - சென்னை பெருநகர காவல்துறை சாம்பியன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments