டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சராசரி 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 50 ரன்களுக்கு கீழ் சரிந்துள்ளது.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேனான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 107 ரன்னுக்கு சுருண்டது. இதனைத்தொடர்ந்து தனது இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நெருக்கடியான சூழலில் களமிறங்கிய ரிஷப் பண்ட், எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டார். அதிவேகமாக அரைசதம் விளாசினார் ரிஷப் பண்ட்.
இந்த டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் விராட் கோலி முதல் இன்னிங்சில் 23 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 2-வது இன்னிங்சிலும் விராட் கோலி 16 பந்துகளை மட்டுமே சந்தித்து 13 ரன்கள் எடுத்ததும் அதே போன்று எல்.பி.டபிள்யூ., முறையில் விக்கெட்டை இழந்தார். அதாவது சுழற்பந்து வீச்சாளர் ஜெயவிக்ரமா வீசிய பந்து ஓரளவு எழும்பி வரும் என்று நினைத்தார். ஆனால் கால்முட்டிக்கும் கீழ் தாழ்வாக ஓடிய அந்த பந்து காலில் பட்டு எல்.பி.டபிள்யூ.க்கு வித்திட்டது.
குறைந்த ரன்னில் ஆட்டமிழந்ததால் 5 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சராசரி நேற்று 50 ரன்களுக்கு கீழ் சென்றது. இதுவரை 101 டெஸ்ட்டில் ஆடியுள்ள கோலி 27 சதம் உள்பட 8,043 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது விராட் கோலியின் டெஸ்ட் சராசரி 49.95 ஆகும். ஒருவேளை இந்த இன்னிங்சில் அவர் 20 ரன்னுக்கு மேல் எடுத்திருந்தால் 50 ரன் சராசரியை தக்க வைத்திருப்பார். மேலும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்து 28 மாதங்கள் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments