Advertisement

கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலக என்ன காரணம்? - சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம்

கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்தது மகேந்திரசிங் தோனி தான் என்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி வருகிற சனிக்கிழமை மகாராஷ்டிரா மாநிலத்தில் துவங்க உள்ளது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், கடந்தப் போட்டியில் ரன்னரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது.

கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக ஐபில் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் முழுமையாக இந்தியாவில் நடைபெறுகிறது. மேலும், கூடுதலாக அகமதாபாத், லக்னோ ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், 10 அணிகள் தலா 14 சூப்பர் லீக் போட்டிகளில் ஆடவுள்ளது.

இதனால் இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளை காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துள்ளனர். ஐபிஎல் போட்டிகள் துவங்க இன்னும் 2 நாட்களே உள்ளநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி அந்தப் பொறுப்பிலிருந்து விலகி, ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளநிலையில், இதுகுறித்து அந்த அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். இன்று நடைபெற்ற சிஎஸ்கே அணி நிர்வாகக் கூட்டத்தில் இந்த முடிவை தோனி தெரிவித்தாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “தோனியின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். கேப்டன் பொறுப்பை பற்றி தோனி யோசித்துக் கொண்டிருந்தநிலையில், ஜட்டுவிடம் (ஜடேஜா) கேப்டன் பதவியை ஒப்படைக்க இதுதான் சரியான நேரம் என்று அவர் உணர்ந்துள்ளார். ஜட்டுவும் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த முன்னேற்றம் அடைந்துள்ளதால், தற்போது சிஎஸ்கேவை கேப்டன் பொறுப்பிலிருந்து ஜடேஜா வழிநடத்த இதுதான் சரியான தருணம் என்பதை நினைத்து, அவரிடம் இந்த பொறுப்பை தோனி ஒப்படைத்துள்ளார்.

image

அணிக்கு எது நல்லது என்பதை தோனி உணர்ந்துதான் இந்த முடிவை எடுத்துள்ளார். தோனியின் இந்த முடிவு எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை, ஏனெனில் இதுகுறித்து முன்பே விவாதிக்கப்பட்டு ஜடேஜாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டே இதுபற்றி பேசியுள்ளோம். கேப்டன் பொறுப்பு குறித்து ஜடேஜாவிடம் முன்பே பேசியிருந்தோம்.

சர்வதேச போட்டிகளின்போது கேப்டன் விராட் கோலிக்கு உறுதுணையாக இருந்து, அவரிடம் கேப்டன் பொறுப்பை எப்படி தோனி ஒப்படைத்தாரோ, அப்படித்தான் இப்போதும். அதேபோல் கேப்டன் மாற்றம் சீராக இருக்க வேண்டும் என்று தோனி விரும்பினார். ஜட்டு ஒரு திறமையான நபர். அவர் ஒரு சிறந்த ஆல்ரவுண்ட் கிரிக்கெட் வீரர் என்பதால், சிறப்பாக விளையாடி, அணியை மேம்படுத்த முடியும். மேலும் தோனியின் வழிகாட்டுதல் எப்போதும் ஜட்டுவுக்கு இருக்கும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

image

40 வயதாகும் தோனி, கடந்த 2 வருடங்களாவே ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக வதந்தி பரவி வந்தநிலையில், 4-வது முறையாக கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தார். கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தோனி, ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தநிலையில்தான் தனது வயது மற்றும் அணியின் எதிர்காலம் கருதியே இந்த முடிவை தோனி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா, தற்போது கேப்டனாக பொறுப்பேற்றுள்ளநிலையில் அவருக்கு பிரபலங்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments