ஐ.பி.எல். கேப்டனாக 150 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஒரே வீரர், ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன், சிஎஸ்கேயில் பல சாதனைகளையும் படைத்த ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனி..!
பெரும் வரவேற்பைப் பெற்ற ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட அணி “சென்னை சூப்பர் கிங்ஸ்”. நான்கு ஐபிஎல் சாம்பியன் பட்டங்களுக்கு அணியை வழிநடத்தி சென்றவர் மகேந்திர சிங் தோனி. 15 வது ஐபிஎல் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகுவதாக அறிவிக்கப்பட்டது. அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவை நியமித்துள்ளது அணி நிர்வாகம். அணியின் இந்த முடிவு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சீசனில் கேப்டனாக இல்லாமல் சாதாரண வீரராக, விக்கெட் கீப்பராக களம் இறங்குகிறார் தோனி.
ஐபிஎல் தொடரின் முதல் சீசன் முதல் சிஎஸ்கே அணியை வழிநடத்தி வரும் தோனி ஒரு கேப்டனாக நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். ஐபிஎல் தொடரில் 200 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக ஒரு அணியை வழிநடத்திய ஒரே வீரர் தோனி தான். நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் அணியை வெற்றி பெறச் செய்த ஒரே கேப்டனும் தோனி தான். மொத்தம் 204 போட்டிகளில் கேப்டனாக விளையாடி 121 போட்டிகளில் வெற்றியை குவித்துள்ளார். ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போக 82 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளார். ஒரு கேப்டனான தோனியின் வெற்றி விகிதம் 59.60% ஆகும். ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது வெற்றிகரமான கேப்டன் தோனி, ரோகித் ஷர்மாவுக்கு(59.68%) அடுத்தபடியாக அதிக வெற்றி விகிதத்தை கொண்ட 2வது கேப்டனாக உள்ளார்.
2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் சிஎஸ்கே கோப்பையை கைப்பற்ற கேப்டன் தோனியே முக்கியக் காரணம். அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்கள் பட்டியலில் 2வது இடத்தில் தோனி உள்ளார். 5 கோப்பைகளுடன் முதல் இடத்தில் உள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா நீடிக்கிறார். கேப்டனாக தோனி குவித்த ரன்கள் 4,456 ஆகும். இதில் அவர் விளாசிய 22 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக 4881 ரன்களை குவித்த விராட் கோலிக்கு அடுத்தபடியாக 2வது அதிக ரன்கள் குவித்த கேப்டன் தோனி தான்.
அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி முன்னேறியதற்கும், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை அதாவது 9 முறை இறுதிப் போட்டிகளில் சிஎஸ்கே விளையாடியதற்கும் மூலக்காரணம் தோனியின் சிறப்பான கேப்டன்ஷிப்தான். ஐ.பி.எல். கேப்டனாக 150 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஒரே வீரர் தோனிதான், ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன், சிஎஸ்கேயின் பல சாதனைகளையும் படைத்த தலைவராக தோனி கருதப்படுவார். ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக என்றென்றும் நினைவு கூறப்படுவார் மகேந்திர சிங் தோனி..!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments