அரையிறுதியை நோக்கி நகர்ந்துவரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தற்போது வாழ்வா? சாவா? கட்டத்தை நெருங்கியுள்ளது.
நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா உட்பட 8 அணிகள் இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் ரவுண்ட் ராபின் சுற்றில் 7 போட்டிகளில் விளையாட வேண்டிய நிலையில், இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி அனைத்திலும் வெற்றி பெற்று, 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் வலுவான நிலையில் உள்ளது. ஏற்கனவே அரையிறுதிக்கும் தகுதியும் பெற்றுவிட்டது ஆஸ்திரேலியா.
தென்னாப்பிரிக்க அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த அணியும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது.
நியுசிலாந்து அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்ட நிலையில், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறுகின்றன. இன்னும் இரு அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில், யார் அந்த 2 அணிகள் என்பதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஏழு போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 7 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 6 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
ஆறு போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி பட்டியலில் 6 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப்போட்டி இந்தியா மகளிர் அணிக்கு வாழ்வா ? சாவா என்ற நிலையில் உள்ளது. இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments