Advertisement

சிஎஸ்கே VS மும்பை இந்தியன்ஸ்: பெரிதும் எதிர்பார்க்கப்படும் முக்கிய வீரர்கள் யார் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான இன்றைய போட்டியில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் 5 வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 33-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை நடைபெற்றுள்ள 6 போட்டிகளில் வெறும் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியோ, இதுவரை பங்கேற்ற 6 போட்டியிலும் தோல்வி கண்டு பரிதாப நிலையில் உள்ளது. 5 முறை சாம்பியனான அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரிலிருந்து வெளியேறிவிடும், ஒரு வேளை சென்னை அணி தோற்றால் இனி நடைபெறும் அனைத்து போட்டிகளுமே வாழ்வா சாவா என்ற நெருக்கடிதான். நிலைமை இவ்வாறிருக்க இப்போட்டி இரு அணிக்குமே வாழ்வா-சாவா மோதல் என்று கூறுவதுதான் சரியானதாக இருக்கும்.

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இரு அணிகள் இடையேயான இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்தவகையில் இப்போட்டியில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் 5 வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

image

ருதுராஜ் கெய்க்வாட்

சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், ‘ஃபார்மிற்கு’ திரும்பியிருப்பது பலம். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 73 ரன்கள் எடுத்திருந்தார் அவர். இன்றைய ஆட்டத்திலும் ருதுராஜ் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவரிடமிருந்து மற்றொரு பெரிய ஸ்கோரை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஐபிஎல் 2021 தொடரில் ருதுராக் கெயிக்வாட் 16 போட்டிகளில் ஒரு சதம், 4 அரை சதங்களுடன் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

imageரோஹித் ஷர்மா

மும்பை அணியில் பெரிய குறை கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் ஃபார்ம் தான். அது சரியானால் அந்த அணியின் பாதி பிரச்சினை முடிந்துவிடும். இந்தத் தொடரில் ரோஹித் ஷர்மா எடுத்த ரன்கள் முறையே 41, 10, 3, 26, 28, 6. மேலும், மிகுந்த அனுபவசாலியான அவர், இந்த தொடரில் அணியை முன்னெடுத்து செல்வதில் தடுமாறி வருகிறார். இதனால் அந்த அணி முதல் வெற்றியை கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தள்ளாடி வருகிறது. எனவே இன்றைய ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி முதல் வெற்றி பெற வேண்டுமானால் ரோஹித் ஷர்மாவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கப்போகிறது.

image

இஷான் கிஷன்

மும்பை அணிக்காக ரூ.15.25 கோடிக்கு வாங்கப்பட்ட இஷான் கிஷானின் 'ஃபார்ம்' கவலை தருகிறது. தொடரில் தொடக்க ஆட்டங்களில் இரு அரைசதங்கள் விளாசியவர் அதற்கடுத்த ஆட்டங்களில் பெரியளவில் சோபிக்காமல் உள்ளார். இன்றைய போட்டியில் இஷான் கிஷன் மீண்டும் பழைய ஃபார்ம்க்கு திரும்புவார் என எதிர்பார்க்கலாம்.

image

ஜஸ்பிரித் பும்ரா

மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ராவை தவிர வேறு எந்த வேகப்பந்துவீச்சாளரும் அணியை காப்பாற்றவில்லை. அவர் மட்டும்தான் அணியின் மானத்தை காப்பாற்ற போராடுகிறார். வலுவான பேட்டிங் வரிசையை உருக்குலைப்பதில் வித்தகராக வலம் வருகிறார் அவர். பும்ராவின் யார்க்கர்களால் சென்னை பேட்ஸ்மேன்கள் நடையை காட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம். பவுலராக அணிக்கு வெற்றி பெற்றுத் தருவர் என நம்பலாம்.  

image

ரவீந்திர ஜடேஜா

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகம் கவனிக்கப்படும் வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா வலம் வருகிறார். ஆனால் கேப்டன்ஷிப் அழுத்தத்தால் அவர் தவித்து வருவது கண்கூடாக தெரிகிறது. இதனால் இந்த தொடரில் அவரது பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகியவை கேப்டன்ஷிப் சுமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதை இதுவரை நடந்த போட்டிகளில் பார்த்தோம். இந்த சூழ்நிலையில் இன்றைய ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கு ஜடேஜா சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜடேஜா தனது கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தாமல் இருப்பதும்   பின்னடைவை தருகிறது.

இதையும் படிக்க: வாழ்வா? சாவா? ஆட்டத்தில் சிஎஸ்கே – மும்பை அணிகள் இன்று மோதல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments